கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 128

Wednesday, January 28, 2026

 

A.I ஐயும், எமது போராட்டங்களும்..
**


தொலைதூரத்தில் வசிக்கும் நண்பர் எனது 'பராசக்தி' கட்டுரையை வாசித்திருக்கின்றார். அவர் அதன் பிறகு அந்தக் கட்டுரை குறித்து ஏ.ஐயோடு உரையாடியிருக்கின்றார்.

அவரின் ஒரு கேள்வி சுவாரசியமானது.

தமிழகத்தைப் போல இலங்கையில் நமக்கு ஒரு அண்ணாத்துரை இருந்திருந்தால், தமிழகம் போல ஒரு சுயநிர்ணயமுள்ள மாநிலமாக நாம் மாறியிருப்போமா என்று.

அவர் பெற்ற பதிலை இங்கே பகிர முன்னர், ஏஐ என்பது தரவுகளில் (data) மிகப் பெருமளவு தங்கியிருக்கும் என்கின்ற எளிய உண்மை நமக்குத் தெரிந்திருக்கும். அந்தத் தரவுகள் பல்வேறு வகை neural networks மூலம் ஊட்டப்படுவது என்பதையும் ஒரு புரிதலுக்காக ஞாபகம் வைத்திருப்போம்.

Uploaded Image


எனது பல்கலைக்கழக பொறியியல் இறுதியாண்டில் என் final project இந்த neural networks என்பதும், அந்த இழையைப் பிடித்துத் தொடர்ந்து போயிருந்தால் நான் இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருப்பேனா என்ற துயரக்கதைக்கு உங்களை இப்போது அழைத்துச் செல்லப் போவதில்லை.

எனக்கு இங்கொரு நண்பர் இருக்கின்றார். அவருக்குப் புலிகளைப் பிடிப்பதில்லை. அவர் போராட்டத்தின் நிமித்தம் வந்து சேர்ந்த பாதையின் அடிப்படையில் அதை என்னால் புரிந்துகொள்ளவும் முடியும். அவருக்கு ஏஐ மீது அவ்வளவு காதல். இலவச ஏஐகளை மட்டுமில்லை, காசு கொடுத்து பிறிமியம் ஏஐ சேவைகளைப் பெறுகின்றவளவுக்கு அதில் அவருக்குப் பைத்தியம்.

அவர் தினமும் ஏஐயோடு பேசிக் கொண்டிருப்பவர். அவருடைய முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருப்பது இந்த ஏஜக்களை எப்படியேனும் 'பாஸிசப் புலிகள்' என்று சொல்ல வைக்க வேண்டும் என்பது.

அவர் எப்படி விதம் விதமாகக் கேள்விகள் கேட்டு ஏஐயை மடக்கினாலும், அதன் எல்லை புலிகள் பயங்கரவாதிகள் வரை போகின்றதே தவிர பாஸிசப் புலிகள் என்ற சிகரத்தை அடைவதில்லை. இதை அவரே பலமுறை எனக்குச் சொல்லியிருக்கின்றார்.

புலிகள் பாஸிசக்காரர்களோ, தீவிரவாதிகளோ, புரட்சியாளர்களோ எவராக இருந்தாலும், ஏஐ அதற்கு ஊட்டப்பட்ட தரவுகளை வைத்துத்தான் அதனால் பதிலளிக்க முடியும். உதாரணத்திற்கு பெருமளவு தரவுகள், புலிகள் போராளிகள் என்று சொல்லப்பட்ட கட்டுரைகளினூடாக எடுக்கப்பட்டிருந்தால், அது அதை வைத்துத்தான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் ('தரவு'களே மாபெரும் செல்வம்).

இந்த 'பாஸிஸப் புலி' நண்பரோ புலிகள் போராளிகள் என்று தொடக்கத்தில் ஏஜ சொல்ல, புலிகள் இங்கே குண்டு வைத்தார்கள், இப்படி மக்களைக் கொலை செய்தார்கள் என்று கேள்வி கேட்டு மடக்கி பாஸிசப் புலிகள் என்று சொல்ல வைக்க முயற்சித்திருக்கின்றார். ஆனால் நண்பரால் வெற்றி காணமுடியவில்லை. இதை எழுதும் இந்தக் கணத்தில் கூட அவர் மனந்தளராத வேதாளம் போல ஏஐ என்னும் விக்கிரமாதித்தனோடு போராடிக் கொண்டிருக்கலாம்.

*

இப்போது மீண்டும் பராசக்தி விடயத்துக்கு, இலங்கையில் அண்ணாத்துரை நமது போராட்டத்தை 50/60களில் தலைமை தாங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற விடயத்துக்கு வருவோம். இந்தக் கேள்வியைக் கேட்ட நண்பருக்கு ஏஐ, 'அதனால் “அண்ணாத்துரை முறை” வெற்றியின் வாய்ப்பை உயர்த்தக் கூடும்; ஆனால் இந்த கட்டமைப்பு கட்டுப்பாடுகளை முழுமையாக அகற்ற முடியாது" என்று முடிவைக் கொடுத்திருக்கின்றது. அதாவது இலங்கையில் ஒரு அண்ணாத்துரை இருந்திருந்தாலும் பெரிதாக மாற்றம் வந்திருக்காது என்பது ஏஐயின் பதில்.

 ஏனெனில் இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி (Unitary) முறை, இந்தியாவில் இருப்பதோ கூட்டாட்சி (Federal) முறை என்று, ஏஐ தான் வந்திருக்கும் முடிவுக்கு ஆதரவாக சான்றுகளைக் கொடுத்திருக்கின்றது.

நான் சொல்வது, அந்த ஒற்றையாட்சி முறையை நாம் எமது 50களின் நடத்திய போராட்டங்களால் காலப்போக்கில் வேறு வகையில் மாற்றியிருக்க முடியும் என்பதை. 1987 இலங்கை- இந்திய ஒப்பந்தம், வரலாற்றுரீதியாக தமிழ்பேசும் மக்கள் வாழும் தாயகம் என்று இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை அங்கீகரித்து, இரண்டையும் இணைத்து இதற்கென ஒரு முதலமைச்சரையும், அமைச்சர்களையும் உருவாக்கியிருந்தது. இதன் மூலம் காணி, கல்வி, பொலிஸ் போன்ற அதிகாரங்களையும் இந்த வடகிழக்கு மாகாணசபைக்கு 13வது சட்டதிருத்தம் (13th Amendment)  மூலம் வழங்கியது.

அதை நடைமுறைப்படுத்துவதில் சாத்தியம் இருந்ததா இல்லையா என்பதைவிட, இந்த பதின்மூன்றாவது சட்டதிருத்தம் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு சென்றிடக்கூடிய ஒரு வழியாகும்.

இந்தியா சுதந்திரமடைந்ததன் (1947) பிறகும் பல்வேறு சமஸ்தானங்கள் இயங்கியபோதும், மொழிவாரிச் சட்டதிருத்தம் கொண்டு வந்தபோதே, தமிழ்நாடு, ஆந்திரா கர்னாடகா, கேரளா என்று மொழிவழி மாநிலங்கள் உருவாகியிருந்தன. அவ்வாறே சிலவேளைகளில் இந்த 1987இல் வடக்கும் கிழக்கும் இணைந்த 13வது சட்டதிருத்தம் சரியாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் இலங்கையின் பல மாகாணங்கள் தமக்கான பொலிஸ்/காணி/கல்வி போன்றவற்றுக்கான தமக்கான தனி அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.

Uploaded Image

நமது ஈழத்து அரசியல் ஆய்வாளர்கள் அடிக்கடி உதாரணம் காட்டும் சுவிஸ் நாட்டைப் போலவும் நாம் ஆகியிருப்போம். சுவிஸில் ஒவ்வொரு கந்தோனும் (மாநிலமும்), அங்கே டொச், இத்தாலியன், பிரெஞ்ச் பேசும் மக்கள் எவர் அதிகம் வசிக்கின்றார்களோ, அதுவே முதல் மொழியாகவும், மற்ற மொழிகள் இணைப்பு மொழியாகவும் கற்பிக்கப்படுவதை நாமறிவோம்.

இலங்கையை விட மிகச் சிறிய நாடான சுவிஸிலே இப்படி டொச், இத்தாலியன், பிரெஞ்ச் மொழிவாரி மாநிலங்கள் இருக்கும்போது, நமது நாட்டில் சிங்களமும், தமிழும் மட்டுமே பூர்வீக மக்களின் பேசுமொழியாக இருக்கையில் எவ்வளவு எளிதாக அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கலாம். மேலும் இவ்வாறு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வரும்போது மத்தியில் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி,சர்வதிகாரமும் பொருந்திய ஒருவராக இல்லாது போகும் நிலைமையும் எளிதில் ஏற்பட்டிருக்கும்.

*
இப்போது ஏஐ யிடம் வருவோம். எனது நண்பர் 'அண்ணாத்துரை இலங்கையில் பிறந்திருந்தால்?' என்ற கேள்விக்கு இப்படி ஒரு பதிலைத் தந்ததுபோல நாம் வேறொரு கேள்வியை ஏஐயிடம் கேட்டுப் பார்க்கலாம்.

ஒரு ஃபிடல் காஸ்ரோ இலங்கையில் பிறந்து தமிழர் ஆயுதப்போராட்டத்தை நடத்தியிருந்தால், என்ன நடந்திருக்கும்? என வினாவினால் என்ன பதில் வந்திருக்கும். நான் ஏஐயிடம் போகப் போவதில்லை. நாமாக சும்மா யோசித்துப் பார்ப்போம்.

ஃபிடல் கியூபாப் புரட்சியை வென்றதால், அவர் இலங்கையில் நமது ஆயுதப் போராட்டத்தை வென்று தந்திருப்பார் என்று சொல்லுமா? அல்லது இலங்கையின் தமிழர் சனத்தொகை, வாழிட நிலப்பரப்பு என்பவற்றைக் கணக்கில் கொண்டு இது வெல்ல முடியாத ஆயுதப் போராட்டம் என்று சொல்லியிருக்குமா? இதை வாசிக்கும் நீங்கள் ஏஐயிடம் உதவிகோராது ஒரு பதிலைச் சொல்லிப் பாருங்கள்.

அவ்வளவு அதிகம் தூரம் போகப் போகவில்லை, கியூபாப் புரட்சியில் ஒரு சர்வதேசப் போராளி நட்சத்திரமாக மாறிய சே குவேரா, ஏன் கொங்கோவிலோ, பொலிவியாவிலோ தோற்றுப் போனார் என்று கேட்டுப் பார்த்தால் நமக்குப் பதில்கள் கிடைக்கலாம்.

ஏஐ என்பது எப்போதும் நடக்கச் சாத்தியமுள்ள விடைகளை நமக்குத் தரலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு இலங்கையில் நாம் புரட்சியொன்றை நடத்தப் போகின்றோம், அது வெல்வதற்கு சாத்தியமுள்ள அதியுயர் பெறுபேற்றைத் தருக என்று ஏஜயிடம் கேட்டால் அது கடந்தகால தரவுகளை வைத்து, மிகுந்த accuracy யோடு ஒரு பதிலைத் தரும். அதை வைத்துக் கொண்டு ஒரு புரட்சியைச் செய்தால் நாம் வென்றுவிடமுடியுமா என்ன? கள நிலவரம் வேறு வகையானது. அதைத் தரவுகளை மட்டும் வைத்து நிர்ணயிக்க முடியாது.

அண்மைய இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். அமெரிக்க இராணுவம் வெனிசுவேலாவில் தாக்குதலை நடத்தியபோது அது குறித்து ஏஜயிடம் டிரம்ப் அங்கிள் கேள்வி கேட்டிருந்தால், அது நிச்சயம் நீங்கள் தாக்குதல் நடத்தி வெனிசுலேவாவின் ஜனாதிபதியை பணயக்கைதியாக கடத்தி வருவதாய் இருப்பின், உங்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்படும் என்றுதான் தரவுகளை வைத்துச் சொல்லியிருக்கும். ஆனால் இத்தாக்குதலில் கிட்டத்தட்ட  நூறுபேர் கொல்லப்பட்டும் அமெரிக்கத் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவே இல்லை.

இத்தனைக்கும் வெனிசுவேலாவில் உயிரிழந்தவர்களில் வெனிசுவேலா ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள்தான் அதிகம்.  இப்படி எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாமல் அமெரிக்கக்காரர்கள் தப்பினார்கள் என்பதை ஏஜ கூட -அதன் தரவுகளை வைத்து- நம்பியிருக்காது. ஆனால் கள யதார்த்தம் இப்படியும் நடக்கலாம் என்பதை நிரூபித்திருக்கின்றது.

*

 ஃபிடல் காஸ்ரோ முதல் புரட்சியின்போது  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட பின்னர்  விடுதலையாகி, இரண்டாம் புரட்சியின் போது வென்றவர். இதேமாதிரி இலங்கையில் ஜேவிபியின் தலைவர் றோகண விஜயவீரா முதல் 'சேகுவராப் புரட்சி'யின்போது கைதுசெய்யப்பட்டு விடுதலையானவர். இரண்டாம்முறை அதே புரட்சியைச் செய்யப்போய் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்.

சிலவேளை றோகண விஜயவீரா, முதல் புரட்சியில் கைதாகி விடுதலையானவுடன், நமது ஏஜக்கு (ஃபிடல் காஸ்ரோ புரட்சி முறை) ஊட்டப்பட்டு இருந்தால், 'தோழரே சென்று வருக, இப்படித்தான் ஃபிடல் முதலில் சிறைக்குப் போய் இரண்டாம் புரட்சியில் வாகை சூடியவர். உங்களுக்கும் வெற்றி நிச்சயம்' என்றுதான் ஏஜ அனுப்பி வைத்திருக்கும்.  ஆனால் நடந்ததுதான் என்ன?

***
ஓவியம்: பிருந்தாஜினி


 

அமைதிக்காக நடத்தல் (Walk for Peace)

Tuesday, January 27, 2026

 

எனது ஸென் ஆசிரியரான தாய், Engaged Buddism என்பதைத் தொடர்ந்து முன்வைத்தவர். ஆன்மிகத்தில் மட்டுமில்லை, அரசியல், தத்துவம் போன்றவற்றிலும் இந்த Engaged தன்மை இல்லாவிட்டால் அவை கடந்தகாலத்தில் உறைந்து போன நடைமுறைக்கு உதவாத  ஒன்றாகிவிடும். தொடர்ச்சியாக உரையாடல்களால் தன்னைப் புதுப்பிக்காத எந்த விடயமும் வாழ்க்கைக்குப் பயனற்றுப் போய்விடும்.

புத்தர் 35 வயதில் ஞானமடைந்தவர் என்று சொல்லப்படுகின்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்திருக்கின்றார். புத்தரின் வாழ்க்கையை அவதானித்தால் அவர் வாழ்வில் 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருந்தவர். அப்படி தொடர்ச்சியாக ஓரிடத்தில் தங்காது நடந்து கொண்டிருந்ததால்தான் புத்தம் மிக எளிதாக இந்தியாவெங்கும் பரவியிருந்தது.  புத்தர் தான் மட்டுமில்லாது, தன்னைப் பின்பற்றியவர்களையும் ஓரிடத்தில் தங்காது தொடர்ந்து நடக்க வைத்துக் கொண்டிருந்தவர்.

உணவுக்காக மக்களிடையே இரத்தலும் (பிச்சை எடுப்பதும்), மிகக் குறைந்த உடைமைகளோடு வாழ்வதும் தொடக்கத்திலேயே புத்தரால் கற்பிக்கப்பட்டால், புத்தரைப் பின் தொடர்ந்தவர்களால் இப்படி நெடுங்காலத்துக்கு நடந்து கொண்டிருப்பது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கவும் இல்லை.

Uploaded Image

மழைக்காலத்தில் மட்டும் தொடர்ந்து நடக்கமுடியாது என்பதால் அவர்கள் ஓரிடத்தில் தங்க வேண்டியிருந்தது. அதுவே பிற்காலத்தில் மழைக்கால retreat ஆக மாறியது. இன்றும் எனது ஆசிரியரான தாய் உள்ளிட்ட பல புத்தப் பிரிவுகளில் இந்த மழைக்கால retreat நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க/ஐரோப்பா போன்ற புத்த மடலாயங்களில் இது winter retreat எனப் பெயர் சூட்டப்பட்டது.

*
இன்றைய ஐக்கிய அமெரிக்காவில் உள்நாட்டிலே நடைபெறும் அக்கிரமங்களும், இதே அமெரிக்கா பிறநாடுகளின் இறையாண்மையில் புகுந்து செய்யும் அட்டூழியங்களும் நாமனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி விரித்தெல்லாம் சொல்லத் தேவையில்லை. ஆனால் இவ்வாறான இருண்ட காலங்களில் நம்பிக்கை தரும் ஒருவிடயமாக இருபதுக்கு மேற்பட்ட பிக்குகள் டெக்ஸலில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு நடக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அதற்கு 'அமைதிக்காக நடத்தல்' எனப் பெயரிட்டு நூற்று இருபது நாட்களாக நடந்து 2,300 மைல்களைக் கடப்பதாக இருக்கின்றார்கள். இப்போது எண்பது நாட்களின் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு இந்தப் பிக்குகள் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல இடங்களில் நடந்திருக்கின்றனர். இப்போது இப்படியொரு நடையைச் செய்யலாம் என்று டெக்ஸசில் இருக்கும் புத்த மடலாயத்தில் இருந்து ஒரு எண்ணத்தை ஒரு பிக்கு முன்வைத்தபோது தாய்லாந்து, வியட்னாம், இந்தியா என்று பல்வேறு நாடுகளிலிருந்து பிக்குகள் இணைந்து இப்போது சமாதானத்துக்காக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

நடத்தல் என்பது எளிதாகத் தெரிந்தாலும், அவர்கள் நடப்பது எப்போதும் பாதுகாப்பான பாதைகள் அல்ல. அவர்களோடு அவர்கள் இந்தியாவில் நடந்தபோது மேற்கு வங்காளத்தில் கண்டெடுத்த தெரு நாயான 'அலோகா' வும் சேர்ந்து நடக்கின்றது.

இந்த நடத்தல் எளிது ஏன் இல்லை என்று சொல்கின்றேன் என்றால், ஒருநாளில் கிட்டத்தட்ட அவர்கள் 20-30 மைல்கள் நடக்க வேண்டும். இப்படி அவர்கள் நடந்தபோது 67வது நாளில் ஒரு பெரும் விபத்தைச் சந்தித்திருக்கின்றார்கள். இதனால் அப்படி நடந்து கொண்டிருந்த சில பிக்குகள் காயமடைந்திருக்கின்றார்கள். அதில் ஒருவரின் இடது கால் வெட்டி எடுக்குமளவுக்கு விபத்து ஆபத்தின் எல்லைக்குப் போயிருக்கின்றது.

எனினும் இந்தப் பிக்குகள் நடந்து கொண்டிருக்கின்றார்கள். தொடக்கத்தில் நடப்பது மட்டுமே குறிக்கோள் என்று நடந்து கொண்டிருந்தார்கள். சின்னதொரு RV அவசரத்தேவைக்காக சென்று கொண்டிருந்ததைத் தவிர, எவ்வித உதவிகளையும் எதிர்பார்த்து அவர்கள் நடக்கவில்லை. தொடக்க நாட்களில் இரவுகளில் யாரேனும் காணிகளில் அனுமதி கேட்டு கூடாரம் அமைத்து தங்கிக் கொள்வார்கள். பின்னர் காலைகளில் எழும்பி நடக்கத் தொடங்குவார்கள்.

இந்த 'அமைதிக்காக நடத்தல்' என்கின்ற விடயம்,  இந்தப் பிக்குகளே எதிர்பார்க்காத அளவுக்கு தீ போல அமெரிக்க மக்களிடையே பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது அவர்களை ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் பாதைகள் எங்கும் நின்று வரவேற்கின்றார்கள். அவர்களின் மதிய/இரவு பேச்சுக்களைக் கேட்க மணித்தியாலக் கணக்கில் இந்த மக்கள் காத்திருக்கின்றார்கள்.

எந்தப் பெரும் பின்புலமும் இல்லாது தொடங்கிய இந்தப் பிக்குகளின் நடை, இப்போது முகநூல், இன்ஸ்டாவில் ஒன்றை மில்லியனுக்கு மேற்பட்ட பின் தொடர்பவர்களால் நிரம்பி வழிகின்றது. அவர்கள் நேரடியாகக் கொடுக்கும் உரைகளைக் கேட்க, தினம் சமூக வலைத்தளங்களில் நான்காயிரம்/ஐயாயிரம் பேர்கள் (நானுட்பட) காத்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு விடிகாலையையும் Today is going to be my peaceful day என எழுதி அன்றைய பொழுதைத் தொடங்குங்கள் என்று இடைவிடாது சொல்கிறார்கள்.

*

இதுதான் ஆர்ப்பாட்டமில்லாத பெரும் மாற்றம். நீங்கள் உண்மையான நோக்கத்துக்காக சுயநலமில்லாது செயற்படும்போது மிகப்பெரும் மக்கள் திரளைக் கவர முடியும் என்பதற்கு இந்த அமைதிக்கான நடத்தல் மிகச் சிறந்த உதாரணம்.  பிக்குகளின் உரைகள் கூட மிக எளிய உரைகள்தான். ஆனால் அது மக்களின் ஆழ்மனதைத் தொடுகின்றது.  அதைக் கேட்டு மனம் நெகிழ்கிறார்கள், கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இந்தப் பிக்குகளோ, தொடர்ச்சியாக எங்களின் உரையை மட்டும் கேட்பதாகவோ அல்லது எங்கள் இந்த நடை 120 நாட்களின் முடிந்தவுடன் எல்லாவற்றையும் கைவிட்டு நீங்கள் போவதாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் மனதுக்கு அமைதியைக் கொடுங்கள். தினம் 15 நிமிடங்களாவது தியானம் செய்து உங்கள் நாளாந்தத்தை அழகுபடுத்துங்கள், எனத் தொடர்ந்து சொல்லியபடி இருக்கின்றார்கள்.

இந்த பிக்குகளைப் போலவே, அவர்களோடு தொடர்ந்து நடக்கும் அலோக்கா நாயும் பிரபல்யமடைந்து விட்டது. அதற்கென நிறைய இரசிகர் கூட்டங்கள்.  சமூக வலைத்தளங்களில் அலோக்காவுக்குவென புதிய பக்கங்களைத் தொடங்கியிருக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன் அலோக்கா தொடர்ச்சியாக நடந்த காரணத்தால், ஒரு அறுவைச் சிகிச்சைக்குப் போனபோது பலர் கவலையில் மூழ்குமளவுக்கு அலோக்கா இப்போது அமெரிக்காவில் அவ்வளாவு பிரபல்யம். இனி நிறைய நாய்களுக்கு இந்தப் பெயர் அமெரிக்காவில் வைக்கப்படும் என நினைக்கின்றேன்.

நான் இந்த பிக்குகளின் நடைபயணங்களில் உருகி நிற்கும் மனிதர்களையும் அவர்களின் கண்ணீரையும் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் பார்க்கும்போது, இந்த பிக்குகள் எத்தனை தூரம் மக்களின் மனதிற்குள் போயிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்திருக்கின்றேன். அப்போது எனக்குள் தோன்றிய எண்ணம், நான் பிறந்த நாட்டிலும் இதே பெளத்தந்தான் பெரும்பான்மையாக இருக்கின்றது. ஒருவகையில் நாங்கள் அந்தவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் ஒருபோதும் இப்படி நெகிழ்ச்சியாக உணர எங்கள் நாட்டு பெளத்தம் எனக்கு எதையும் தரவில்லையே,  எவ்வளவு துரதிஷ்டசாலிகள் என்றும் நினைத்துக் கொண்டேன்.

ஏன் இப்படியான ஒரு நடையை, இலங்கையில் வடக்கிலிருந்து தெற்கிலிருந்து நடந்தால் கூட 300 மைல்களைத் தாண்டாத சிறுதீவில் புத்த பிக்குகள் சமாதானத்துக்காக நடக்க முன்வரவில்லை என்றும் நினைத்தேன். ஒரு அரசியல்வாதியை/அரசியல் கட்சியை விட, இந்த ஆன்மீகத்துறவிகள் எமது நாட்டை ஒன்றாக்கும் விதைகளை எளிதாகத் தூவ முடியும் அல்லவா?

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர்க்கோ எந்த ஆலமரத்தில் ஒரு புது புத்த விகாரையை ஆக்கிரமித்துத் தொடங்கலாம் என்பதிலே நாளும் பொழுதும் கழிகிறது. அப்படி பலவந்தமாக வைக்கும் புத்த மடலாயங்களிலிருந்து முதலில் வெளியேறுவதே புத்தராகத்தான் இருப்பார் என்கின்ற சிறு ஞானமும் இல்லாத பிக்குகளாக அவர்களும் அவர்களைச் சார்ந்த பெளத்த பீடங்களும் இலங்கையில் இருப்பதுதான் துயரமானது.

அவர்களின் புத்தரையும், புத்தத்தையும் நாம் இப்போதைக்கு ஒருபக்கம் விட்டுவிடுவோம். நமக்கு Engaged Buddism சொல்லித் தந்த தாயிலிருந்து எண்ணற்ற ஸென் துறவிகளும், இப்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் இந்த புத்த பிக்குகளும் சமாதானத்துக்கும், நமது தனிவாழ்வுத் துயரங்களின் மீட்சிக்குமான நம்பிக்கையாக இருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து அமைதியைக் கற்றுக்கொள்வோம்.

***

புகைப்படம்: 'Walk for Peace'

 

கார்காலக் குறிப்புகள் - 127

Monday, January 26, 2026

 

தீ பரவட்டும்!
***


பராசக்தி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஈழத்தின் கடந்தகாலமே மனதுக்குள் ஓடியது.  1950களில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடந்தபோது, இலங்கையிலும் 1956 இல் தனிச் சிங்களத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எப்படி இந்தி தெரிந்தால்தான் தமிழர்க்கு அரசு வேலைகள் கிடைக்குமோ, அப்படியே இலங்கையிலும் 1956 தனிச் சிங்களச் சட்டத்தினால், சிங்களம் படித்தால்தான் தமிழர்க்கு அரசு உத்தியோகம் கிடைக்கும் என்ற நிலைமை வந்திருந்தது.

எப்படி இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு இருந்ததோ, 1940களில் இந்தி எழுத்துக்களை அழித்து அண்ணாத்துரை போன்றவர்கள் போராட்டத்தைத் தொடங்கியதுபோலவும், கருணாநிதி டாமியாபுரத்தை அழித்து கல்லாக்குடி என்று அதன் இன்னொரு கட்டத்தைத் தொடங்கியதுபோலவும், இலங்கையிலும் தமிழர் பிரதேசங்களில் பல்வேறு வகையில் சிங்களத் திணிப்புக்கு  எதிராக எதிர்ப்புக் காட்டப்பட்டது.

அதில் முதன்மையானது வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள 'சிறி' எழுத்துக்கள் தமிழர்கள் பகுதிகள் எங்கும் தார்பூசி அழிக்கப்பட்டது. இந்த சிங்கள் சிறிக்கு எதிராக மலையகத் தமிழர்களும் வடக்கு/கிழக்கு தமிழர்களைப் போல தீவிரமாக எதிர்ப்புக் காட்டியிருந்தமை  வரலாற்றில் மறக்காமல் குறிக்கப்பட வேண்டியது.

Uploaded Image
 
இவ்வாறு இலங்கையில் அனைத்து தமிழ்ச் சமூகமும் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டியது. இலங்கை பாராளுமன்றத்தில் அன்றைய தமிழ் அரசியல்வாதிகள் இதை எதிர்த்து சத்தியாக்கிரகம் இருந்தபோது  அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு, சத்தியாக்கிரகத்தில் துரத்தியடிக்கப்பட்டிருந்தனர்.

1956 இல் தமிழ்ச் சிங்களத் திட்டத்தின் எதிர்ப்பின் காரணமாக 1957இல் இலங்கைப் பிரதமருக்கும் தமிழ்த் தரப்புக்கும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டு அச்சட்டம் நீக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், புத்தபிக்குகளாலும் பிறராலும் அது எதிர்க்கப்பட்டு தனிச்சிங்களச் சட்டம் அப்படியே உத்தியோகபூர்வமாக இருந்தது. இதன் நீட்சியில் 1958 இல் முதன் முதலாக தமிழர்க்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.  அப்போது உத்தியோகபூர்வமாக  150 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்லப்பட்டாலும், அது ஆயிரத்தைத் தாண்டியது என்றும் சொல்கின்றார்கள்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்போடு தனித் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கோஷம் 50களில் இருந்தபோதும், அண்ணாத்துரை 60களின் தொடக்கத்தில் அந்த பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுகின்றார். மீண்டும் இந்தி 1960களில் திணிக்கப்பட்டபோது அது 1965 மாபெரும் பெரும் இந்தி எதிர்ப்பாக மாணவர்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து எழுந்தது. அந்தத்தீயே இந்தப் பராசக்தியில் 'தீ பரவட்டும்' என உணர்ச்சிக் கொந்தளிப்பின் பகுதியானது.

*
அதன் பிறகு காலத்துக்காலம் தமிழகம் தமிழுக்காகவும், தன்னாட்சி உரிமைக்காகவும் பல தியாகங்களைச் செய்திருந்தாலும், அது ஒருபோதும் ஆயுதங்களை ஏந்தும் போராட்டங்களுக்குச் சென்றதில்லை (70களில் நக்சலைட் பாதிப்பில் தமிழகத்து சில பகுதிகளில் ஆயுதம் ஏந்தியதைத் தவிர).

ஆனால் இலங்கையிலோ எமது தமிழ் அரசியல்வாதிகள் 76ல் தனி நாட்டுக்கான தனித் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்துகின்றார்கள்.  அது  பின்னர் எப்படி முற்றுமுழுதான ஆயுதப்போராட்டத்துக்குப் போக 1983 தமிழர்கள் மீதான இனப்படுகொலை காரணமாயிற்று என்பது கடந்தகால வரலாறு.

நான் இலங்கை அரசியல்/ஆயுதப் போராட்டத்தைப் பற்றி பேசும்போது அநேகமாக, இந்தித் திணிப்பு/தனிச் சிங்களச் சட்டம், தனித் தமிழ்நாடு/ தனித் தமிழீழம் போன்ற ஒற்றுமையான புள்ளிகளில் அதிகம் கவனம் செலுத்துவதுண்டு. எப்படி தமிழ்நாடு தனிப் பிரிவினையைக் கைவிட்டும், தமிழ்மொழிக்கான உரிமையைக் கைவிடாது இருந்ததோ, கிட்டத்தட்ட அவர்கள் எதிரநோக்கிய மொழித் திணிப்பை எதிர்நோக்கிய நாம் ஏன் தொடக்கத்திலேயே தனித் தமிழீழப் பிரகடனத்தைக் கைவிட்டு தமிழ் மொழிக்கான உரிமையே அகிம்சையான போராட்டத்தை நோக்கித் திருப்பவில்லை என்பதைப் பற்றி அதிகம் யோசிப்பதுண்டு.

இவ்வளவு பெரும் சனத்தொகை இருக்கும் தமிழ்நாட்டவர்களாலேயே ஒரு தனிநாடு சாத்தியம் இல்லை என்கின்றபோது, அதைவிட மிகச் சிறிய நிலப்பரப்பிலும்,  குறைந்த சனத்தொகையிலும் இருந்த நாம் ஏன் தனித்தமிழீழக் கோரிக்கையை ஆரம்பத்திலே (70களிலேயே) கைவிடவில்லை என்று நினைப்பதுண்டு.

இது எமது பக்கத்தில் இருந்து வினாவவும் விமர்சிக்கவும் உரையாடவும் வேண்டிய புள்ளியாகும். இது  ஒருபுறமிருந்தாலும், இரண்டாவது கேள்வி நான் எங்கள் ஆயுதப்போராட்டத்தை முன்வைத்து அநேக இடங்களில் கேட்பது:

1983 இனப்படுகொலையின்போது எம்மிடையே தோன்றிய பல்வேறு இயக்கங்களை இந்தியா வளர்க்காமலும், அவர்களின் பயிற்சிக்குப்  பின் தளங்களையும் ஆயுதங்களையும் அள்ளி வழங்காமலும் இருந்திருந்தால் நாம் வேறு வழிகளில் சென்றிருக்கக்கூடுமா என்பதைப் பற்றியது.

இப்படி கேள்வி கேட்டுப் பார்க்கலாம். ஒருவேளை தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியிருந்தால், இந்திய அரசு அவர்களை எப்படி நசுக்கியிருக்கும். அல்லது தமிழ்நாட்டவர்கள் மத்திய அரசுக்கெதிராகப் போராடுகின்றோம் என்று அருகிலிருந்த பாகிஸ்தானிலோ சீனாவிலோ ஏன் இலங்கையிலோ ஆயுத உதவியைப் பெறுவதையும்/ பின் தளமாகப் பாவிப்பதையும் அறிந்திருந்தால், இந்திய மத்திய அரசு என்ன செய்திருக்கும்?

ஆனால் ஏன் இந்திய மத்திய அரசு நமது தமிழ் இயக்கங்கள் எல்லாவற்றுக்கும ஆயுதங்களையும், பயிற்சியையும் அளித்து ஆதரவு கொடுத்தது?  1983 தமிழர் படுகொலை நடந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோது அப்படி தமிழர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நேரடியாகவே இந்தியா தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் கொடுத்திருக்க இந்திரா காந்தி தலைமையிலான அரசுக்கு எளிதில் முடிந்திருக்குமல்லவா?  கிழக்கு பாகிஸ்தானையே, பங்களாதேஷாக சுதந்திர நாடாக்க முடிந்த இந்தியாவிற்கு, சின்னஞ்சிறிய நாடான இலங்கை எம்மாத்திரம்?

எப்படியோ இந்தியா ஒருபோதும் இலங்கையில் தமிழர்க்கான தனிநாடு உருவாவதை விரும்பப்போவதில்லை. ஏன் விரும்பாது என்பதற்கான எளிதான காரணம் அவ்வாறு உருவாகினால் அது தமிழ்நாடு  தனியாகப் பிரிவதற்கும் எளிதான 'விஸா' கொடுப்பது போன்று ஆகிவிடும். அவ்வாறே பல்வேறு மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில் பிரிவதற்கான எளிய வழியாக அந்த்ப் பாதை ஆகிவிடும். ஆக தமிழ் இயக்கங்களுக்கு இந்திய அரசு பயிற்சிக்கான பின் தளத்தையோ, ஆயுதங்களையோ கொடுத்தபோது ஒருபோதும் அது தனித்தமிழீழ எல்லைவரை அது விரும்பியிருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆக, இந்தியா, இலங்கை என்கின்ற நாட்டை (அப்போதைய ஜெயவர்த்தனா அமெரிக்கச் சார்ப்பு எடுத்தவர்) தனது கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் பொருட்டு ஒரு பகடைக்காயாக நமது இயக்கங்களைப் பாவித்திருக்கின்றது என்பது எல்லோர்க்கும் புரியக்கூடிய எளிய உண்மை.
 
இவ்வாறான உண்மைகளை விளங்கிக் கொண்டாலும், தமிழகத்தில் தீ பரவட்டும் என்று தொடங்கிய கொந்தளிப்பைக் காலத்தின் நீட்சியில் அவர்களே அது ஆயுதப்போராட்டத்துக்குப் போகாது கட்டுப்பாட்டுக்குள் வைத்திக்கவும் அவர்கள் முடிந்திருக்கின்றது என்பதுதான் ஈழத்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம். அதுமட்டுமில்லை இயன்றளவு தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் பேணக்கூடிய ஒர் மாநில அரசையும் இன்றளவும் அவர்களால் கைவிடாதிருக்க முடிகின்றது என்பதும் கவனிக்கத்தது.

நாமோ முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்திப் பேரழிவைப் பார்த்துவிட்டோம். இவ்வளவு சின்னத் தீவில் எதற்கு ஓர் தனிநாடு வேண்டியிருந்தது என்று நாம் புலம்பெயர்ந்து வாழும் பெரும் நாடுகளைப் பார்க்கும்போது திகைத்து நிற்கின்றோம். சரி நம் தாய் மொழிக்காகத் தான் போராடினோம் என்றாலும், எங்ளைவிட நிலப்பரப்பிலும், சனத்தொகையிலும் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழ்மொழியை முன்வைத்து நடந்த போராட்டங்களிலாவது கற்றுக் கொண்டிருக்கலாம் (போர் முடிந்து 15 வருடங்களுக்குப் பிறகும் அதற்கான எந்த நம்பிக்கையையும் காணவில்லை என்பது இன்னும் துயரமானது).

இதைவிட கவலையானது இலங்கையில் வடக்கு கிழக்கு என்கின்ற இரண்டு மாகாண(மாநில) அரசுக்கள் ஒரு துரும்பைத்தானும் அசைக்கமுடியாத, எவ்வித அதிகாரங்களுமற்ற உதிரி அரசுக்களாக இருக்கின்றன என்பதுதான்.

நம்மால் சிறு தீக்குச்சியால் கூட மொழியை முன்வைத்து collective ஆக தீயைப் பற்ற வைக்க முடியாது இருக்கின்ற காரணத்தால்தான்,  இலங்கையில் சில தமிழ் அரசியல் கட்சிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் கோமாளிக் கூத்துக்களைக் காட்டி பிழைத்துக் கொண்டிருக்கின்றன.  அதற்குப் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்களும்/புலம்பெயர் அமைப்புக்களும் பக்க வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

***

றிஹானா நௌபரின் பதிவு

Sunday, January 25, 2026

 

இளங்கோவை நேரில் சந்தித்தும் பேச வாய்ப்பு கிடைக்காமைக்குக் காரணம் நான் அவரை அடையாளம் காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இவர் யார்? எனக் கேட்ட போது அருகில் இருந்த வடகோவையாரை கூறியவர்கள் இளங்கோவை ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டுமே கூறினார்கள் . பெயரைக் கூட அவர்கள் குறிப்பிடவில்லை.

முகநூலில் அவ்வப்போது அவரது எழுத்துக்களை வாசித்திருந்தாலும் அவரது “பேயாய் உழலும் சிறு மனமே” மற்றும் “நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” ஆகிய நூல்களை அண்மையில் தான் வாசிக்கத் தொடங்கினேன்.

Uploaded Image


இரண்டும் வேறுபட்ட நூல்கள். முதலாவது அவரது வாழ்வியல் அனுபவங்கள் சினிமா இசை என செல்கின்றது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. உண்மையில் இளங்கோவின் சிறுகதை எழுத்து நடை கதையை நகர்த்தியுள்ள விதம் எல்லாம் சுவாரசியமானவை.

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்களின் அன்றாட மனநிலை, தொழில் வாழ்க்கை, உறவுகள், காதல் அத்தோடு அரசியல் சார்ந்தும் சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன.
இளங்கோவின் இரண்டு நூல்களுக்கும் இடையிலான வாசிப்பில் பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. அது அரசியல் ரீதியாகவோ சினிமா சார்ந்ததாகவோ அமைந்திருந்தது.

கதைகள் இடையே அவர் குறிப்பிட்டுள்ள தத்துவக்கருத்துக்கள் உண்மைத்தன்மையாக இருந்தாலும் நகைச்சுவை கலந்திருந்தது.
வலி மிகுந்த சம்பவங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து வாசகர்களை மிகவும் துக்கத்திற்கு உள்ளாக்காமல் நாசுக்காக கதைகளை கொண்டு சென்றிருக்கும்  பாங்கு வித்தியாசமாக இருக்கின்றது. Tourist family திரைப்படத்தை பார்த்த போதும் அந்த உணர்வு இருந்தது.  

கதைகளிலோ திரைப்படங்களிலோ திடீர் திருப்பம் இருக்கும் போது ஆர்வம் மேலோங்கும். இளங்கோவின் கதைகள் அவ்வாறு தான் இருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் எதிர்பாராத திருப்பங்களையோ முடிவுகளையோ கொண்டிருக்கின்றன.

எத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் வலிகளுக்கு நடுவேயும் வாழ்க்கையை நேசிக்கவும் ஒவ்வொரு கணப்பொழுதையும் விரும்பியவாறு கழித்திட விரும்புபவர்களுக்கு இக்கதைகள் நிச்சயம் பிடித்துப் போகும்.

 

கார்காலக் குறிப்புகள் - 126

Saturday, January 24, 2026

 

After the hunt

***

Cancel Culture என்பது MeToo Movement இற்குப் பிறகு அதிகம் கவனத்துக்குரியதானது. அதாவது பிரபல்யமான ஒருவர், பாலியலிலோ அல்லது இன்னபிற விடயங்களிலோ தவறாக நடந்து கொள்ளும்போது அவருக்கு அதுவரை ஆதரவோ/அனுசரணையோ வழங்கும் அமைப்புக்கள், அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதாகும். உதாரணத்துக்கு கோல்ஃப் விளையாட்டில் பிரபல்யமாக இருந்த டைகர் வூட்ஸ் பாலியல் விவகாரங்களில் சிக்கியபோது, அதுவரை அனுசரணையாளர்களாக இருந்த நைக்கி தனது விளம்பர அனுசரணையிலிருந்து அவரை விலத்திக் கொண்டது. இது ஓர் பழைய உதாரணம், ஆனால் இன்றையகாலத்தில் இந்த Cancel Culture இற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

கனடாவில் பிரபல்யம் வாய்ந்த விளையாட்டாக இருப்பது ஐஸ் ஹாக்கி. அதன் இளம் ஹக்கி அணி (Junior Hockey Team) கூட்டாக ஒரு பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் நிமித்தம், அதுவரை இந்தத் தேசிய ஹக்கி அணிக்கு அனுசரணையாளர்களாக இருந்த  போன்ற வங்கி (Scotia bank), எண்ணெய் நிறுவனம் (Imperial Oil), கோப்பி கடை (Tim Hortons) போன்ற பல நிறுவனங்கள் தமது ஆதரவை விலத்தியிருந்தன. இறுதியில் கனடிய அரசே அதில் தலையிட்டு ஒரு நேர்மையான தீர்ப்பை வழங்கும்வரை அந்த ஆண்டுக்கான ஐஸ் ஹொக்கி அணி வீரர்களை விலக்கி வைக்குமளவுக்கு நிலைமை தீவிரமாகப் போயிருந்தது.

Uploaded Image


After the hunt என்பது ஐக்கிய அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற யேல் பல்கலைக்கழகத்தினுள் நடக்கின்ற பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய கதையாகும். திரைப்படத்தின் தொடக்கமே அறிவுஜீவிகள் தீவிரமாக ஒரு பேராசிரியையின் வீட்டில் இருந்து உரையாடுகின்றனர். அல்மா என்கின்ற பேராசிரியருக்கு இளவயது இன்னொரு ஆண் பேராசரியர் மீது நெருக்கமான நட்பு இருக்கின்றது. அல்மாவின் கீழ் சில மாணவர்கள் தமது கலாநிதிப் பட்டத்தைப் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேராசிரியையின் வீட்டு இரவு விருந்து முடிகின்றபோது அவரோடு படிக்கின்ற மாணவியை அவரின் இடத்தில் கொண்டுபோய் விடுகின்றேன் என்று அல்மாவின் ஆண் நண்பர் கூடவே போகின்றார். அடுத்த நாள் அந்தப் பெண் மாணவி இந்தப் பேராசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார் என்ற முறைப்பாடோடு வருகின்றார்.

அதன்பிறகு யார் யாரெல்லாம் பாதிக்கப்படுகின்றனர். யார் உண்மையைச் சொல்கின்றார்கள் அல்லது எது உண்மையாக இருக்கும் என்கின்ற சாம்பல்நிற குழப்பமான எல்லைக்குள் நின்று இந்தத் திரைப்படம் தன் கதையைச் சொல்கின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் மாணவிக்கு பேராசிரியையான அல்மா ஒரு முன்னோடி. அவரைப் போலவே ஆக வேண்டும் என்று விரும்புகின்ற இம்மாணவி கிட்டத்தட்ட அந்தப் பேராசிரியை போலவே கிட்டத்தட்ட ஆடைகளே அணிபவர். மேலும் இப்பெண் மாணவி ஒரு செல்வந்தப் பின்னணியில் வந்த கறுப்பினக்காரி மட்டுமில்லாது ஒரு தற்பாலினக்காரியும் கூட. அவரின் இணையான binary partner இல்லாதபோது இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கின்றது. ஆக மிகச்சிக்கலான (complex) பாத்திரமாக பாதிக்கப்பட்ட இப்பெண் பாத்திரம் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் மிக எளிதில் ஓர் தீர்வை எடுத்துவிட முடியாது இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த மாணவி தனக்குப் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கின்றதெனச் சொல்லும்போது, பேராசிரியை அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார். அவருக்கு ஏதோ ஒருவிதத்தில் தன் நண்பரான ஆண் பேராசிரியரை காப்பாற்றும் அழுத்தம் இருக்கின்றது. பிறகு கதை நிகழும்போது இப்பேராசிரியையும் அவரது பதின்ம வயதில் அவரின் தந்தையின் நண்பரொருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்கின்ற விபரத்தை நாம் அறிகின்றோம். அந்நிகழ்வு உண்மையில் நடந்ததா அல்லது நடக்கவில்லையா என்கின்ற Ambiguity இருந்தாலும், ஒரு மூத்த தலைமுறை இவ்வாறான விடயங்களை மூடிமறைக்க விரும்புவதைப் போல, புதிய தலைமுறை செய்வதில்லை என்பதை இந்தக் கறுப்பின மாணவி மூலம் அறிகின்றோம்.

இத்திரைப்படத்தின் இறுதிவரை இதுதான் நடந்த உண்மையென அறுதியாகச் சொல்லப்படுவதில்லை. அதுவே பலரை இத்திரைப்படத்தை அலுப்படைய வைக்கும். இது ஓர் உரையாடல் களமாக, பார்வையாளர்கள் தமக்கான் உண்மைகளை எடுத்துக் கொண்டு செல்வதாக அமைந்திருப்பதுதான் இத்திரைப்படத்தை திருப்பத் திரும்ப யோசிக்க வைக்கின்றது.

Uploaded Image

அந்தக் கறுப்பின மாணவி சிலவேளைகளில் தனக்கு நிகழாத பாலியல் துஷ்பிரயோகத்தை நடந்ததாகச் சொல்லியிருந்தால் கூட, ஆண் பேராசிரியரான ஹாங் அவ்வளவு நல்லவரெனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அவர் இதன் நிமித்தம் பேராசிரியர் பதவியை இழந்து, அல்மாவை அவரது தங்குமிடத்தில் சந்திக்கும்போது, அவர் நெருங்கிய நண்பராக இருக்கும்போதும், போதும் வேண்டாம் என்கின்றபோது அவரை நெருங்கி பாலியல் துஷ்பிரயோகத்துக்குப் போகும் ஒரு காட்சி பிற்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

ருவகையில் உடல்களின் தீரா வேட்கைக்கும், பாலியலுக்கான Consent இற்கும், அப்படி Consent கொடுக்கப்பட்டாலும், நிறுத்தப்படவேண்டும் என்று ஒருவர் சொல்லும்போது அப்போதே நிறுத்தவேண்டும் என்கின்ற பல புள்ளிகளை நாம் சிந்திப்பதற்கான காட்சியாகக் கூட நாம் அதனைக் காணலாம்.

இறுதியாக ஒரு காட்சி வரும். அதில் பேராசிரியராக இருக்கும் அல்மா அவர் சார்ந்த துறையின் டீனாக ஆகிவிடுவார். பாதிக்கப்பட்ட பெண்ணான கறுப்பினப் பெண் தனது துணையைத் திருமணம் செய்வதற்குத் தயாராக ஆவார். இதைவிட முரண்நகையாக ஆண் பேராசிரியராக இருந்தவர் பல்கலைக்கழகத்தில் இருந்து விலத்தப்பட்டாலும் அவர் ஒரு பிரபல்யம் வாய்ந்த அரசியல் ஆலோசகர் ஆகிவிடுவார்.

அப்படியாயின் பாதிக்கப்பட்டவர்க்கு நீதி வழங்கப்பட்டதா? அல்லது பாதிப்பைச் செய்த தரப்பு உண்மையிலே தன் தவறுகளை மனப்பூர்வமாக ஏற்று மன்னிப்புக் கேட்டதா போன்ற கேள்விகளுக்கான பதில்களை பார்வையாளர்களிடையே இத்திரைப்படம்  விட்டுவிடுகின்றது.

நம் தமிழ்ச்சூழலிலும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் மேற்பரப்பில் குற்றச்சாட்டுக்களாய்த் தோன்றுவதும், பிறகு காலப்போக்கில் பேசாப்பொருளாக மறைக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் துயரமானது.   இந்த விடயங்களை நாம் மனந்திறந்து பொதுவெளியில் உரையாடுவது என்பது மனித உறவுகளுக்கிடையில் அமைதியான பாதுகாப்பான நிலைமைகளை உருவாக்குவதற்கே அன்றி, தனிப்பட்ட நபர்களை குற்றவாளிக் கூண்டிலேற்றி திருப்தி காண்பதற்காக அல்ல என்கின்ற புரிதல்களுக்கு நாம் அனைவரும் இதற்கு முன்னராக வந்து சேர்தல் இன்னும் நலம் பயக்கும்.

***

கார்காலக் குறிப்புகள் - 125


இந்தப் புதுவருடம் நல்லதொரு புனைவின் வாசிப்போடு தொடங்கியிருக்கின்றது. 'அத்தைக்கு மரணமில்லை' என்ற சீர்சேந்து முகோபாத்யாய் எழுதிய குறுநாவலே அது. மூன்று தலைமுறையின்  கதைகள் எனச் சொல்லப்பட்டாலும், இரண்டு தலைமுறைப் பெண்களான சோமலதா, வசந்தா ஆகியோரின் குரலில் எழுதப்பட்டிருக்கின்றது. அத்தையம்மா என்கின்ற மூத்த தலைமுறைப் பெண் எப்படி அடுத்த தலைமுறைப் பெண்களான சோமலதாவையும், வசந்தாவையும் பாதிக்கின்றனர் என்பதை வாசிக்கும்போது அறிகின்றோம்.

செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்த ஜமீன் குடும்பத்திற்குள் நிகழும் கதை. இந்த ஜமீன் குடும்ப ஆண்கள், அவர்களுக்கு இருக்கும் சொத்துக்களை தமது சொகுசான வாழ்வுக்காக அழித்து கிட்டத்தட்ட வறுமைக்குள் அக்குடும்பம் போகும் காலத்தில் சோமலதா என்கின்ற எளிய குடும்பப் பின்னணியில் வந்த பெண் எப்படி அக்குடும்பத்தைக் காப்பாற்றுகின்றாள் என்பதைவிட எனக்கு அந்தப் பெண்ணின் உள்மனது காமம். அதிகார வேட்கை, செல்வம் என்பவற்றை எப்படிக் கையாள்கின்றது என்பதை வாசிப்பதே இன்னும் சுவாரசியமாக இருந்தது. 
Uploaded Image


வசந்தா புதிய தலைமுறைப் பெண், அவள் முன்னைய தலைமுறைப் பெண்களின் வாழ்க்கை முறையைப் போல வாழப் போவதில்லை என்றாலும் அவளால் தனது தாயான சோமலதாவினதோ, அவளின் பெரியம்மாவினதோ வாழ்வினை ஏதோ ஒருவகையில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

தனது அம்மாவின் மீது கல்யாணத்தின் பின் பித்துப் பிடித்தலைகின்ற ஓர் இளைஞனையும் வசந்தாவினால் புரிந்துகொள்ள முடிகின்றது. அந்த இளைஞன்  சோமலதாவுக்காக அவர்களின் வீட்டு வாசலில் தினம் வைக்கும் ஒற்றை ரோஜாப்பூவை வசந்தா ஒருநாள் தற்செயலாகக் காணும்போது அந்த இளைஞன் சிறுமியான வசந்தாவின் கைகளில் சிரித்துபடி கொடுத்துவிட்டுப் போகும்போது வசந்தா பின்னாளில் அதை நினைவு கொள்ளும்போது 'அது எவ்வளவு அற்புதமான நாள்' என்கின்றாள்.

அது, தனது தாயிற்கு எதிராக இன்னொரு முனையில் இருப்பதாக நினைக்கும் வசந்தா, தன் தாயைப் புரிந்து கொள்கின்ற இடம் மட்டுமின்றி, தனது தாயின் அந்த 'நிறைவேறாக் காதலை' முன்வைத்து, எவ்வித தீர்ப்புக்களையும் அம்மாவிற்கு வழங்காத ஒரு புதிய தலைமுறைப் பெண்ணாகவும் வசந்தா இருக்கின்றாள்.

இதை நன்றாகத் தமிழில் தி.சிறினிவாஸன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். இது ஆங்கிலத்தில் The Aunt who wouldn't die' என்று வந்திருக்கின்றது. அந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது என நூலில் குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள நூலகத்தில் ஆங்கிலப் பிரதியும் இருப்பதால் அதையும் சும்மா உசாவிப் பார்த்தேன். அதில் Boshon என்ற பெயரே வசந்தாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து யாரோ கேட்டபோது பெங்காலியில் Boshon எனக் குறிப்பிடப்படுவது வசந்தத்தைக் குறிப்பிடுவது. ஆகவே தமிழில் வசந்தா என மாற்றியதாக தமிழ் மொழிபெயர்ப்பாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் நூலை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும்போது அதை அப்படியே தமிழாக்குவது நல்லதா அல்லது மூலமொழிக்கு 'அவ்வப்போது' செல்லவேண்டுமா என்று ஒரு கேள்வியும் இருக்கின்றது.

அதுபோலவே, இந்நூலின் கதாபாத்திரங்கள் பேசும்போது தமிழ்ப் பேச்சு வழக்கு பாவிக்கப்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் நியமமொழி (Standard Language) பாவிக்கப்படுகின்றது. அதை ஒருவித slang இற்கு மாற்றுவது சரியா என்ற ஒரு கேள்வியும் இருக்கின்றது. இதை சிறினிவாஸனிடம் மட்டுமில்லை, தமிழாக்கம் செய்யும் அனைவருக்குமான  பொதுக்கேள்வியாக விட்டுவிடுகின்றேன்.

மற்றும்படி இதொரு நல்ல குறுநாவல் என்பதிலோ, நல்ல தமிழாக்கம் என்பதிலோ எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. முக்கியமாக தமிழில் நூற்றுக்கணக்கான பக்கங்களில் நாவல்களை எழுதுபவர்களும், தாங்கள் எழுதும் புனைவே சிறந்ததென்று முன்னுரைகளில்  முழங்குகின்றவர்களும் இவ்வாறான குறையப் பக்கங்களில் எழுதப்படும் புதினங்களை வாசிக்கவேண்டும் என்று பிரியப்படுகின்றேன்.

எவ்விதப் பிரகடனங்களுமின்றி ஒரு புதினம் நம் மனங்களுக்குள் நுழைந்து எதையோ செய்யும்போது அது ஒரு சிறந்த படைப்பாக மாறிவிடுகின்றது. இல்லாவிட்டால் 40 வருடங்கள் கழிந்தபின்னும் 'ஜே.ஜே.சில குறிப்புகளை'யோ அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட 'அத்தைக்கு மரணமில்லை'யையோ இப்போது வாசிக்கும்போதும்  இந்தளவு வியந்து பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.

***

 

துடுப்பாடும் ஆனந்தி

Friday, January 23, 2026

 

-சிறுகதை-

'டாடி, நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது' என்று மகள் கேட்டபோது தேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் கேள்வி எப்படியோ பிள்ளைகளிடமிருந்து ஒருநாள் கேட்கப்படும் என்று தேவனுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் இவ்வளவு விரைவில்  கேட்கப்படும் என்பதைத்தான் தேவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் உடல் ஒரு கணம் விதிர்விதிர்த்து, வியர்வையில் தெப்பலாக நனையத் தொடங்கியது.

தேவனுடைய மனைவி ஆனந்தி கலகலப்பானவர், செல்வம் கொழித்த குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அந்தக் குடும்பத்தின் பெயரில் நாட்டின் பல பாகங்களில் பாடசாலைகளும், கோயில்களும் இருந்தன. ஆனந்தியின் தாத்தாவிற்கு பிரிட்ஷ்காரர்கள் 'சேர்' என்று பட்டங்கொடுத்து கெளரவிக்குமளவுக்கு அவர்கள் நாடு முழுதும் மிகுந்த  செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள். 

தேவன் அப்போது ஒரு பிரபல்யமான கிரிக்கெட் விளையாட்டுக்காரர். வலது கரத்தில் மின்னல் பாய்வதுபோல அவரது துடுப்பு மைதானத்தில் நடனமாடும். அவரின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே அவருக்கு ஓர் இரசிகர் பட்டாளம் இலங்கையில் இருந்தது. எந்தளவுக்கு சிறந்த கிரிக்கெட்காரராக தேவன் இருந்தாரோ அந்தளவுக்கு பெண்கள் விடயத்தில் 'தீராத விளையாட்டுக்கார'ராகவும் இருந்தார்.
 

இரவிரவாக மதுவில் நீராடுவதிலும், விடிய விடிய நடனவிடுதிகளில் பெண்களோடு சேர்ந்து நடனமாடுவதிலும் அலுக்காத ஒருவராக தேவன் இருந்தார். தேவனின் இந்த வித்தைகளைப் பார்க்கும் நண்பர்கள் எல்லாம், 'மச்சான், இவன் மட்டுந்தான் கால்களின் பெறுமதியை கிரிக்கெட்டிலும், நடனத்திலும் சரியாகப் பயன்படுத்துகின்றவன்' என்று பொறாமையில் சொல்லித் திரிவார்கள்.

இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து  கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்கும்போது , விடிய விடிய விழித்திருந்து தேவன் மது அருந்துவதைப் பார்ப்பவர்கள், நாளை இவனால் தள்ளாடாமல் கிரிக்கெட் ஆடமுடியுமா என்று ஐயமுறுவார்கள். ஆனால் மைதானத்திற்குள் வந்துவிட்டால் தேவன் வேறொருவராக விசுவரூபம் எடுத்துவிடுவார். இந்த மனிதனா நேற்று மதுவின் குளியல்தொட்டிக்குள் நீச்சலடித்தான் என்று சந்தேகிக்குமளவுக்கு தேவனின் துடுப்பு பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அப்பால் விளாசித் தள்ளும்.

அப்போது இலங்கை அணிக்கு சர்வதேசத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்திருக்கவில்லை. ஒருபொழுது ஆஸ்திரேலியா அணி அவர்களின் நட்சத்திர வீரரான டொன் பிராட்மனோடு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட வந்தபோது தேவனே இலங்கை அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். இலங்கை கிரிக்கெட் அணியில்  ஓன்றிரண்டு தமிழர்களே விளையாட இத்தனைகால வரலாற்றில்  இடம்பெற அனுமதிக்கப்பட்டபோது, ஒரு தமிழர்  அதற்கு ஒருபொழுது தலைமை தாங்கியிருக்கின்றார் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

தேவன் சென்னை சேப்பாக்கத்தில் சாகசம் நிகழ்த்திப் பெற்ற 215 ஓட்டங்கள்தான் அவரை ஓர் நட்சத்திர வீரராக உலங்கெங்கும் மாற்றியது. தேவன் சென்னைக்குப் போனபோது அவரது கையில் ஆடுவதற்கு ஒரு துடுப்பு கூடக் கிடையாது. அவசரமாக அருகிலிருந்த கடையில் துடுப்பை  வாங்கிக் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்திருக்கின்றார். அன்றைய காலங்களில் இந்தியா அணியிடம் இலங்கை அணி மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருந்தது. தேவனின் துடுப்பு காற்றில் எழுதிய கவிதையில் அவர் இரட்டைச் சதத்தை சேப்பாக்கத்தில் பெற்றிருக்கின்றார்.

தேவனின் ஆட்டத்தில் மெய்சிலிர்த்துப்போன ஒரு சென்னை இரசிகர், அவர் முதல் சதத்தை அடித்தபோது தேவனுக்குப் பிடித்த ரம் போத்தலை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கின்றார். அதைக் கொடுத்தது மட்டுமில்லை, 'நாளை நீ இரட்டைச் சதத்தை அடிப்பாயானால், நீ பம்பாய் நகரைப் போய்ப் பார்ப்பதற்கான  பயணச்செலவும் எனக்குரியது' என்றிருக்கின்றார் அந்தத் தீவிர இரசிகர். தேவன் ரம் போத்தலை தனது காதலியைப் போல உச்சிமோர்ந்து முத்தமிட்டுவிட்டு,  'நாளை மும்பாயிற்கான விமான டிக்கெட்டோடு தயாராக வாருங்கள்' என்று கண்ணைச் சிமிட்டிச் சொல்லியிருக்கின்றார். முதல் நாள் இரவு  அருந்திய ரம்மாலோ, இல்லை உண்மையாகவே  திறமையாலோ, தேவன் அடுத்தநாள் இரட்டைச் சதத்தை எட்டியிருக்கின்றார். தேவனின் இந்த இரட்டைச் சதத்தை இன்னொரு இலங்கை வீரர் வந்து அதே  சேப்பாக்க மைதானத்தில் முறியடிக்க கிட்டத்தட்ட அதற்குப் பிறகு முப்பது வருடங்களாகி இருக்கின்றது.

*

தேவன் இவ்வாறு ஒரு உச்ச கிரிக்கெட் ஆட்டக்காரராக உயரங்களில் ஏறிப் போனபோது இன்னொருபக்கத்தில் குடும்ப வாழ்வில் அதளபாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தார்.  அவருக்கும் ஆனந்திக்கும் நான்கு பிள்ளைகள் அப்போது பிறந்திருந்தன. தேவனுக்கும் முப்பது வயதைத் தாண்டியிருந்தது. தேவன் மற்ற கிரிக்கெட்காரர்கள் போல ஒரு வேலைக்கு போகவோ, நல்லதொரு குடும்பஸ்தவனாக இருக்கவோ பிரியப்படவில்லை. மனைவியினது பூர்வீகச் சொத்துக்களின் நிமித்தம் அவர் வாழ்க்கை  நதி போல மதுவிலும், கிரிக்கெட்டிலும் பொங்கிப் பிராவகரித்துக் கொண்டிருந்தது. ஆனந்தியால் தேவன் வேலைக்குப் போகவில்லை என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிந்ததென்றாலும், தேவனின் முடிவுறாத பெண்களின் மீதான பித்தை மட்டும் ஒருபோதும் தாங்க முடியாதிருந்தது.

தேவனுக்கு அப்போது ஆங்கிலேயப் பின்னணியில் வந்த ஒரு காதலி இருந்தார். அந்தக் காதலியோ விரைவில் ஆனந்தியை விவாகரத்துச் செய்துவிட்டு தன்னைத் திருமணம் செய்யும்படி தேவனுக்கு நெருக்குவாரம் கொடுத்தபடி இருந்தார். தேவனுக்கு ஆனந்தியின் பணக்காரப் பின்னணியால் கிடைக்கும் செளகரியங்களை விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. எந்த ஆண்தான் குடும்பம் என்ற அமைப்பால் வரும் வசதி வாய்ப்புக்களை விட்டு விலகிச் செல்ல விரும்புவார். தேவனும், மனைவியை ஒரு புறம் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனைப் போல கோபிகையர்களின் பின்னால் அலைந்தபடி திரிந்தார். 

திருமணமான புதிதில் தேவனின் இந்த காதல் லீலைகளை கண்டு வெறுத்து, விவாகரத்து வேண்டுமென்று ஆனந்தி தேவனிடம் கோரியிருந்தார். நிலைமை இந்தளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதே என்று சுதாகரித்த இரண்டு பேரினதும் செல்வாக்குள்ள குடும்பங்கள் தலையிட்டுத்தான் அந்த வழக்கை மீளப்பெற வைத்திருந்தனர்.
ஆனால் காலம் செல்லச் செல்ல, நான்கு பிள்ளைகள் பிறந்தபின்னும் பெண் பித்தில் திளைத்துக் கிடந்த தேவனை என்ன செய்வதென்றும் ஆனந்திக்கும் விளங்கவில்லை. வெள்ளைக்காரப் பெண்ணோடான புதிய காதல் உறவை விட்டுவிட்டு தன்னிடமும் தன் குழந்தைகளிடமும் மீண்டு வரும்படி ஆனந்தி தேவனிடம் மன்றாடியிருக்கின்றார். அது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்ற முடிவுவந்தபோதே ஆனந்தி விவாகரத்தை தன் வக்கீல்கள் மூலம் கோரியிருக்கின்றார். இது தேவனின் ஆண் என்கிற மிருகத்தை உலுப்பி எழுப்பியிருக்க வேண்டும். அவர் ஆனந்தியிற்கு மனதாலும் உடலாலும்  நிறைய உளைச்சலைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார்.

அப்போது ஆனந்தி பொலிஸ் அதிகாரிக்கு ஒரு கடிதத்தை எழுதத் தொடங்கினார்:

மதிப்புக்குரிய பொலிஸ் அதிகாரிக்கு,

நான் தொலைபேசியில் உங்களிடம் கேட்டதிற்கிணங்க இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். நான் இப்போது எனது கணவர் தேவனிடம் இருந்து விவாகரத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றேன். அவர் தற்சமயம் இங்கிலாந்தில் இருப்பதால் அவரால் இந்த வழக்கிற்கு வரமுடியாதிருக்கின்றது. அவரின் வழக்கறிஞர், தேவன் விரைவில் இங்கிலாந்திருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் வர இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தேவன் அவரின் தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்து எங்களோடு மீண்டும் வாழப்போவதாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த வீடு எனது சொந்தப்பணத்தில் வாங்கிய வீடாகும்.

ஒரு விவாகரத்து வழக்கு நிலுவையில் நீதிமன்றத்தில் இருந்தால், எதிர்த்தரப்பை வீட்டில் அனுமதிக்கத் கூடாது என்பது என்பது சட்டமாகும். அத்துடன் எனக்கும் தேவனை எனது வீட்டில் வந்து தங்க அனுமதிக்க வேண்டாம் என்று எனது வழக்கறிஞரால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
எனது கணவரை நீண்டகாலமாக நன்கு அறிந்தவள் என்பதால், அவர் எல்லாவித வன்முறையைகளையும் பயன்படுத்தி எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கக்கூடும் என்று நான் அச்சமுறுகிறேன்.

இவ்வாறான சூழ்நிலையில், எனக்கு ஒரு பாதுகாப்பு பொலிஸிடம் இருந்து வேண்டுமென உங்களிடம் கோருகின்றேன். ஏதேனும் ஒரு பிரச்சினை எனது கணவர் மூலம் வருமென்றால் நான் உங்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பேன். அப்போது எனக்குப் பாதுகாப்புத் தர நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். எங்கள் வீட்டில் தொலைபேசி இருக்கின்றது, ஆகவே ஏதேனும் விபரீதமாக நடந்தால் நான் உங்களுக்கு உடனே தொலைபேசியில் அழைக்க முடியும்.

மேலும் எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதையும், அவர்களின் பாதுகாப்புக் குறித்தும் நான் அக்கறை கொள்ளவேண்டும் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இப்படிக்கு,
ஆனந்தி தேவன்

*

இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்த தேவன் ஐப்பசி மாதம் ஆறாந்திகதி ஆனந்தியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றிருக்கின்றார். அன்றைய இரவை விடுதியில் கழித்த தேவன் ஆனந்தியின் வீட்டுக்குப் போகும்போது விடிகாலை ஒரு மணியாக இருந்திருக்கின்றது தம்பதியினர் இருவரும் அன்றைய இரவை சேர்ந்தே ஒரே வீட்டில் கழித்திருக்கின்றனர்.

அடுத்த நாள் காலை அவர்களின் இரண்டு பிள்ளைகள் அருகிலிருந்து பாடசாலைக்குச் செல்ல, ஐந்து வயதுக்குள் இருந்த  மற்ற இரண்டு பிள்ளைகள்  மட்டும் வீட்டில் இருந்திருக்கின்றனர். அன்றைய காலை பத்தரை மணியளவில் தேவன் வீட்டிலிருந்து டாக்ஸியில் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.

'அம்மா தலைவலியால் அவதிப்பட்டபடி சமையலறையில் நீண்ட நேரமாக விழுந்து கிடக்கின்றார்' என்று ஆனந்தியின் நான்கு வயது மகள் பக்கத்து வீட்டுக்காரருக்குச் சொன்னபோது, அந்த வீட்டுப் பெண்மணி வந்து பார்த்தபோது, சமையலறையில் பக்கத்தில் இருந்த அறையில் ஆனந்தி  விழுந்து கிடந்திருக்கின்றார். அவரின் கழுத்தடியில் உலக்கை குறுக்காகக் போடப்பட்டிருந்தது. ஆனந்தியின் உடலில் அசைவுகள் எதுவுமில்லாததைக் கண்டு பயந்து அஞ்சிய அந்தப்பெண்மணி பொலிஸை அழைத்திருக்கின்றார்.

ஆனந்தியின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்பதை பொலிஸ் உடனே கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு குடும்பத்துக்குள் கொலை நடக்கும்போது, முதலாவது சந்தேக நபராக கணவராகவோ மனைவியாகவோ இருப்பது சாதாரணம் என்பதால் தேவனை அவரின் நண்பரின் வீட்டில் வைத்து பொலிஸ் சந்தேகத்தின்பேரில் கைது செய்திருக்கின்றது.

ஆனந்திக்கு வீட்டில் உதவுவதற்கென ஒரு மாதத்துக்கு முன்னரே சிங்களப் பையனான வில்லியம் மாத்தறையில் இருந்து வந்திருக்கின்றான் அப்போதுதான் சமையலுக்கு உதவிக்கென இருந்த வில்லியம் காணாமல் போயிருப்பதைப் பொலிஸ் கண்டுபிடித்திருக்கின்றது. அத்தோடு ஆனந்தி அணிந்திருந்த தாலிக்கொடியும், வளையல்களும் காணாமல் போயிருப்பதும் தெரிந்திருக்கின்றது.

ஏன் வில்லியம் தப்பியோடினான், அவனுக்கு இந்த கொலைக்கும் என்ன சம்பவம் என்று அறிய வில்லியமை பொலிஸ் வலைவிரித்துத் தேடியதில் வில்லியமும் அவன் பிறந்த ஊரில் வைத்து பிடிபட்டிருக்கின்றான். மாத்தறையில் வில்லியமைப் கைதுசெய்த பொலிஸ் அவனே நகைகளின் பொருட்டு கொலை செய்தான் என்கின்ற  வாக்குமூலத்தை அவனிடமிருந்து பெற்றிருக்கின்றது.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனபோது யார் உண்மையில் ஆனந்தியைக் கொலை செய்தார் என்பதில் குழப்பம் வந்திருக்கின்றது.
ஒரு கொலை வழக்கு இரண்டு வருடம் சந்தேக நபர்களான இருவரும் சிறைக்குள் இருக்க நடந்திருக்குமா என்று தெரியவில்லை. தேவனும் வில்லியமும் சிறைக்குள் இருக்க, ஆனந்தியின் கொலை வழக்கு இரண்டாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடந்திருக்கின்றது.

*

தேவனின் சார்பில் பிரபல்யமான வழக்கறிஞர்கள் வந்து தேவன் குற்றமற்றவர் என நிரூபிக்க முயன்றனர். தேவன், ஆனந்தியின் வீட்டை விட்டு வெளியேறிய காலை பத்தரைக்குப் பின்னரே ஆனந்தி கொலை செய்யப்பட்டார் என்று சாட்சியங்களின் மூலம் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். முக்கியமாக தேவனை கூட்டிக்கொண்டு போக காலையில் டாக்ஸிக்காரர் வந்தபோது, ஆனந்தி வாசலடியில் நின்று கையசைத்தார் என்று சொல்லப்பட்டது. தேவன் வீட்டை விட்டுக் கிளம்பியபோது ஆனந்தி உயிரோடு இருந்தார், ஆகவே தேவன் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை என்று டாக்ஸிக்காரரின் சாட்சியத்தை முன்வைத்து தேவனின் வழக்கறிஞர்கள் திறமையான வழக்கைக் கொண்டு சென்றனர்.

ஆனால் சட்டென்று வழக்கில் ஒரு திருப்பம் வந்தது. தொடக்கத்தில் ஆனந்தியின் நகைகளுக்காக ஆசைப்பட்டே கொலை செய்தேன் என்று ஆரம்பத்தில் வாக்குமூலத்தைக் கொடுத்த பதினெட்டு வயதான வில்லியம் நீதிமன்றத்தில் 'நான் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை' என்று வேறொரு கதையைச் சொல்லத் தொடங்கினான்.

'நான் காலை ஒன்பது மணியளவில் சமையலறைக்குள் தேங்காய் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது தேவன் என்னை மாடியில் இருந்த அவரின் படுக்கையறைக்கு வரக் கூப்பிட்டார்.  நான் மேலே போனபோது அங்கே ஆனந்தி கட்டிலில் அழுதபடி அமர்ந்திருந்தார். நான் வருவதைக் கண்டதும் தேவன் சட்டென்று ஆனந்தியின் கூந்தலைப் பிடித்து தனது இடது கரத்தால் ஆனந்தியின் கழுத்தை வளைத்து நெரிக்கத் தொடங்கினார். துடிக்கத் தொடங்கிய ஆனந்தியின் முழங்கால்களை என்னை இறுக்கப்பற்றிப் பிடிக்கும்படி கத்தினார். சில நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்தியின் மூச்சடங்கியதும், ஆனந்தியின் உடலை கீழே இழுத்து வந்து சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த உரலும் உலக்கையும் இருந்த அறையில் நானும் தேவனும் கிடத்தினோம்' என்றான் வில்லியம்.

'அப்படியாயின் நீ ஏன் ஆனந்தியின் தாலிக்கொடியையும், வளையல்களையும் எடுத்துக்கொண்டு தப்பியோடினாய்' என்று வில்லியத்திடம் வழக்கை விசாரித்த நீதிபதி கேட்டார்.

'தேவன்தான் தாலிக்கொடியையும், காப்பையும் கழற்றித் தந்ததோடு, ஆனந்தியின் கைப்பையிலிருந்து நிறையப் பணத்தையும் கையில் தந்து, இங்கிருந்து எங்கேயாவது தப்பியோடிப் போய்விடு' என்று அதட்டி அனுப்பிவைத்தார் என்றான் வில்லியம்.

இப்போது நீதிபதிக்கு எல்லாமே குழப்பமாகிவிட்டது. அந்தக் காலத்தில் இப்போதுபோல கைரேகைகள் எடுத்து குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்துவிடவில்லை. யாரின் கைவிரல்ரேகை ஆனந்தியின் உடலில் இருக்கின்றது என்றும் அறியமுடியாது. ஆனந்தி குப்புறக்கிடந்ததைப் பார்த்த பக்கத்துவீட்டுப் பெண்மணி அவர் மேல் போடப்பட்டிருந்த உலக்கையும் எடுத்து, கொலை நடந்த சாட்சியங்களையும் அவர் அறியாமலே கலைத்தும் விட்டிருந்தார்.

ஆனந்தியின் கொலையில் வில்லியத்துக்கு மட்டுமில்லை தேவனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்கின்ற குழப்பம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டது. ஆனாலும் தேவனின் வழக்கறிஞர்கள் தேவன் நிரபாரதி என நிரூபிக்க கடுமையாக இன்னும் முயற்சித்தார்கள்.

இந்த வழக்கிற்காகவே இங்கிலாந்தில் மிகவும் பிரபல்யமான இருந்த  வழக்கறிஞரை நேரடியாகவே இலங்கைக்கு தேவனின் சார்பில் வழக்காட வரவழைத்தனர். அவர் இந்தக் கொலை ஆனந்தி நின்றுகொண்டிருந்தபோது யாரோ ஒருவர் பின்புறமாக கைகளை வளைத்து கழுத்தை நெரித்தே கொலை செய்திருப்பார் என்பதைத் தனது திறமையான வாதத்தால் நிரூபித்தார்.

அத்தோடு இந்தக் கொலை மேல் மாடியின் படுக்கையறையில் அல்ல, கீழே இருந்த சமையலறையில்தான் நிகழ்ந்திருக்கின்றது என்றிருக்கின்றார். சமையல்காரனான வில்லியம்தான் ஆனந்தியோடு முறைகேடாக நடக்க முயன்றிருக்கின்றான். அப்போது அதற்கு எதிராக ஆனந்தி போராடியபோது, சமையலறையில் இருந்த ஆணி ஆனந்தியின் தலையில் குத்திய காயமும் சாட்சியமாக இருக்கின்றது என்று அந்த வழக்கறிஞர் வாதாடியிருக்கின்றார்.

இங்கிலாந்து வழக்கறிஞரின் வாதத்துக்கு மேலும் ஆதாரம் சேர்க்க, வில்லியமின் முழங்கையில் ஆனந்தி இறுதி நேரத்தில் மூச்சடங்குவதற்கு முன்னர் அவரது கைகளால் கீறிய காயங்கள் காணப்பட்டன. ஆனந்தியின் உடல்மேல் உலக்கை போடப்பட்டு கொலை செய்யப்பட்டதை பக்கத்து வீட்டுப் பெண்மணி கண்டபோது ஆனந்தியின் உடலில் தேங்காய்த் துருவல்களும் இருந்தன. ஆக தேங்காயைத் துருவிக் கொண்டிருந்த வில்லியந்தான் ஆனந்தியைக் கொலை செய்தார் என்றும், Benefit of a Doubt என்பதன்  அடிப்படையில் தேவன் நிரபராதி எனவும் நீதிபதியால் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

*

அன்று உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் தலைவர், தான் உலகில் சிறந்த பதினொரு வீர்ர்களைத் தேர்ந்தெடுக்கின்றேன் என்றால் அதில் முதன்மையானவர் தேவன் என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கின்றார். தேவன் சிறைக்குள் இருந்தபோது மேற்கிந்தியத் தீவு வீரர்கள் அவரை நேரில் சென்று சந்திக்கும் அளவுக்கு தேவன் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரராக இருந்தார். அவரின் சுழலும் கையின் சாகசத்திற்காகவும், பந்துகளை அடித்தாடும் அழகிற்காகவும் அவருக்கு உலகெங்கும் இரசிகர்கள் இருந்தார்கள்.

இந்த கொலை வழக்கு முடிந்து விடுதலையான கொஞ்சக் காலத்திலே தேவன் தனது காதலி நான்ஸியை இலண்டனில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் சென்று வசிக்கத் தொடங்கினார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தேவன் சிங்கப்பூர் நாட்டு கிரிக்கெட் அணிக்கு தலைவராகவும் உயர்ந்தார். சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தபோது மலேசியா கிரிக்கெட் அணிக்கும் தேவன் தலைவரானார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று மூன்று நாடுகளுக்கும் கிரிக்கெட்டில் தலைமை தாங்கிய ஒரேயொருவர் என்ற புகழும் தேவனுக்குக் கிடைத்தது.

தேவனின் விடுதலை பெற்ற கொஞ்ச ஆண்டுகளில் வில்லியமும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஒரு கொலை வழக்கில் முதலாம், இரண்டாம் கொலையாளிகளாக இருந்திருக்கக்கூடிய இரண்டு பேருமே விடுதலை செய்யப்பட்டு ஆனந்தியின் பரிதாபமான உயிருக்கு மட்டும் முறையான நீதி வழங்கப்படாது அநாதரவாக அவர் கைவிடப்பட்டிருந்தார்.

ஆனந்தி கொலை செய்யப்பட முன்னர், இங்கிலாந்தில் இருந்த தேவனுக்கு ஆனந்தி எழுதிய கடிதத்தில், 'தயவு செய்து உங்கள் தீராத காதல் விளையாட்டுக்களையும், குடிக்கு அடிமையான நிலையையும் கண்டபின், உங்களோடு நான் சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனக்கு தயவுசெய்து விவாகரத்து தந்துவிடுங்கள்' என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தேவனின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அவரது நண்பரொருவர் தேவனைச் சிறைக்குள் சந்தித்தபோது, தேவன், அந்த நண்பனின் மனைவி இந்த வழக்கு குறித்து என்ன நினைக்கின்றார் என்று அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த நண்பர் 'எனது மனைவி நீங்கள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்' என்று சொல்லியிருக்கின்றார். அதற்குச் சிரித்தபடி தேவன், 'எனது கொலைப்பட்டியலில் அடுத்து உனது மனைவிதான் இருக்கின்றார் என்பதைச் சொல்லிவிடு' எனக் கூறியிருக்கின்றார்.

ஆனந்தியின் கொலை நடந்தபோது அதே வீட்டில் ஆனந்தி-தேவனின் இரண்டு பிள்ளைகள் இருந்திருக்கின்றனர். அதில் நான்கு வயதான மகளிடம் நீதிமன்றம் 'என்ன நடந்தது?' எனக் கேட்டபோது அந்தக் குழந்தை, 'மம்மியை, டாடியும், வில்லியமும் மேலே இருந்து கீழே தூக்கிக் கொண்டு வந்து சமையலறைக்கு பக்கத்தில் படுக்க வைத்திருந்தனர்' என்று சொல்லியிருந்தது. ஆனால் நீதிமன்றம் இரண்டாம் நாள் 'என்ன நடந்தது' என மீண்டுமொரு முறை கேட்டபோது அந்தக் குழந்தை நடந்தவற்றைச் சொல்ல முடியாது தவித்ததால் அந்த முக்கிய சாட்சியம் வழக்கில் கவனத்தில் எடுக்கப்படாது கைவிடப்பட்டிருந்தது.

அந்த மகள்தான் தனது சகோதரிகளோடு தேவனோடு சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்தபோது பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு தேவனைப் பார்த்துக் கேட்டாள், 'டாடி நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது?'.

****

(நன்றி: 'அம்ருதா' - ஜனவரி, 2026)
ஓவியம்: கோபிகிருஷ்ணன்

 

கார்காலக் குறிப்புகள் - 124

Wednesday, December 31, 2025

 

சுற்றுச் செலவுக் கலை
***


தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப் பற்றையும், தமிழ்த் தொண்டையும் நாமனைவரும் அறிவோம்.  தமிழை உலகறியச் செய்த முக்கியமான ஆளுமைகளில் ஒருவரென அவரை நாம் தயக்கமேதுமின்றிச் சொல்ல முடியும்.  அவர் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி இத்தாலியன், இலத்தீன், ஸ்பானிஷ், கிறீக், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தவர். அவர் நூற்று முப்பதுக்கும் மேலான நூல்களை எழுதியிருப்பதாகச் சொல்கின்றார்கள்.

அவர் எழுதிய நூல்கள், அவர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழ் மொழி/பண்பாடு குறித்து ஆற்றிய சொற்பொழிவுகள்,  தனியொரு மனிதராக அவர் கட்டியமைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வதேச மாநாடுகள் பற்றியல்ல நான் இங்கே பேச விரும்புவது.

Uploaded Image
அவர் பயணம் செய்த நாடுகளைப் பற்றி விரிவாக அவர் எழுதிப் பதிவு செய்திருக்கும் 'ஒன்றே உலகம்' என்ற நூலே என்னை அதிகம் இந்தப் பொழுதில் கவர்ந்திழுக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஊர்காவல்துறையில் பிறந்த தனிநாயகம் அடிகள் தனது பயணம் எட்டாம் வயதில் தொடங்கியது என்கின்றார். அது அப்போது தீவாக இருந்த ஊர்காவல் துறையிலிருந்து (1920களில்) யாழ் நகருக்கு மூன்று மணித்தியாலம் படகில் செல்வதோடு தனது முதல் பயணம் தொடங்குகின்றது என்கின்றார்.

பின்னர் அது அருகிலிருந்த இன்னொரு தீவான நெடுந்தீவுக்கும், தொடர்ந்து அவரது 12 வயதில் தனது தகப்பனோடு இந்தியாவுக்குச் செல்லும் பயணமாகவும் நீட்சியடைகின்றது என்கின்றார். தனது சிறுவயதுக்காலத்தில் ஊர்காவல்துறை ஒரு முக்கிய துறைமுக நகர். பல நூற்றுக்கணக்கான படகுகள் பாய்விரித்து நிற்பதும், அப்படித் தங்கி நிற்கும்போது அவை பழுதுபார்க்கும் இடங்கள் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும், அங்கே வந்து சேரும் மாலுமிகளின் கதைகளைக் கேட்பதில் இருந்து தனது பயணங்களுக்கான விதை ஊன்றப்பட்டிருக்கலாமெனவும் பதிவு செய்கின்றார்.

அத்தோடு வேற்று நாடுகள் செல்லும்  5000 இற்கும் மேற்பட்ட பாய்மரக் கப்பல்கள் ஊர்காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அடிகளார் சொல்கின்றார். பாக்கு நீரிணையால் பல பாய்மரக்க்கப்பல்கள் வணிகம் நிமித்தம் சென்று கொண்டிருந்த காலமாக அது இருக்கக்கூடும். இப்படி புகழ்பெற்ற ஊர்காவல்துறை பின்னர் அரசியல் காரணங்களால் பொலிவிழந்து போனது குறித்தும் இதில் அவர் விபரிக்கின்றார்.

பக்கத்திலிருந்த யாழ் நகருக்கு போகவே மூன்று மணித்தியாலங்கள் எடுக்கும் ஒரு தீவில் பிறந்த தனிநாயகம் அடிகளார், இந்த 'ஒன்றே உலகம்' நூலில் கிட்டத்தட்ட  50 நாடுகளுக்கு மேலாக உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் (ஆஸ்திரேலியா) தவிர்த்து பயணித்திருக்கின்றார் என்பதும், அந்த நாடுகளின் நிலவியல் பற்றியும், கலாசாரம் பற்றியும், மக்களின் உளவியல் பற்றியும் விபரித்திருக்கின்றார் என்பதும் வியப்பானது. கிட்டத்தட்ட இந்த நாடுகள் அனைத்தையும் அவர் 1950/60இற்கு முன்னரே பார்த்து முடித்திருப்பார் என்றே எண்ணுகின்றேன். இந்நூல் அறுபதுகளின் மத்தியில் நூலாக்கம் பெற்றிருக்கின்றது.

எனக்கு மிக வியப்பாக இருப்பது என்னவென்றால், அவர் ஐரோப்பாவையோ, அமெரிக்காவையோ, தென் கிழக்காசியாவையோ பார்த்ததல்ல, தென்னமெரிக்காவில் ஆர்ஜெண்டினாவின் அந்தம் வரை போயிருப்பதும், இன்றைக்கும் பலர் போகத் தயங்குகின்ற ஆபிரிக்காக் கண்டத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளையும் பார்த்திருப்பதும், அவற்றை விரிவாக எழுத்தில் பதிவு செய்திருப்பதுமாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் அன்றையகால வளர்ச்சியைச் சொல்லும் அதேசமயம் அடிகளார் அதன் தென்பகுதியில் தெளிவாகத் தெரியும் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குதல்களையும், அவர்கள் மீது காட்டப்படும், வேறுபாடுகளையும் விபரிக்கின்றார். அதுபோலவே தென்னமெரிக்காவில் மாயா, இன்கா, அஸெட்டஸ் இனப் பூர்வீக மக்களின் வாழ்வை எப்படி ஸ்பானியர்களால் அழிக்கப்பட்டது பற்றியும், அன்றே அவர் பெருவின் குஸ்கோ, மச்சுபிச்சு எல்லாம் சென்று பார்க்கின்றார் என்பது வியப்பானது.

அன்றைய அமெரிக்காப் பயணங்களில் இலங்கையைப் பற்றி பள்ளி மாணவர்கள் உள்ளிடப் பலரிடம் கேட்டபோது அவர்களுக்கு அது தெரியவில்லை என்றும், பல அமெரிக்கர்களுக்கு இந்தியா என்பது அசுத்தமான இடம் என்பது போன்ற விம்பம் இருந்ததாகவும், அதேவேளை தென்னமெரிக்க மக்கள் வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் என்றும், அவர்கள் பாடல்களிலும் ஆடல்களிலும் உற்சாகமாக ஈடுபடுபவர்கள் என்றும், அத்தோடு அவர்களுக்கு இந்திய கலைகள்/நடனங்கள் மீது அதிக ஈர்ப்பிருப்பதையும் இந்த நூலில் அடிகளார் பதிவு செய்கின்றார்.

ஒரு நாட்டின் உண்மையான பண்பாட்டையோ, வாழ்க்கை முறையையோ, எவரும் அதன் தலைநகரைப் பார்ப்பதால் கண்டுகொள்ள முடியாதென்றும், ஏனென்றால் அங்கே பலவிதமான நாட்டு கலாசாரமக்கள் வசிக்கக்கூடுமென்றும், கிராமங்களை நோக்கிப் பயணிப்பதே ஒரு நாட்டை உண்மையாகப் பார்ப்பதற்கு ஒப்பானது என்று கூறி அடிகளார் கிடைக்கும் சந்தர்ப்பம் எல்லாம் சிறிய நகரங்களுக்கும்/ஊர்களுக்கும் ஒவ்வொரு நாடுகளுக்குப் போகும்போதும் பயணிக்கின்றார்.
 
அதுபோலவே தனக்குப் பிறமொழிகள் பலது தெரிவதால் மற்றவர்கள்  தன் நிறத்தை/தலைமயிரை/உடலமைப்பைப் பற்றிப் பேசுவதை எல்லாம் தெரியாது மாதிரிக் கேட்டுவிட்டு, அவர்களிடம் ஏதோ ஒருவகையில் அவர்கள் பேசும் மொழி தனக்குத் தெரியும் என்று காட்டும்போது அவர்கள் அதிர்ச்சியடைவதைப் பார்ப்பது தனக்கு நகைச்சுவை விளையாட்டாக இருக்கின்றது என்கின்றார்.

ஒருமுறை ஆர்ஜெண்டீனாவுக்குப் போனபோது ஒரு கடைநிலை ஊழியன், நீங்கள் அன்பைப் போதிக்கும் ஒரு ஃபாதர் என்றால், எங்கள் மொழியைக் கற்று எங்கள் மக்களுக்குப் போதிக்க்கவேண்டும் ஸ்பானிஷ் கற்கும் நூலைத் தந்துவிட்டுப் போனதையும் அடிகளார் பதிவு செய்கின்றார் (இதன் பிறகுதான் அடிகளார் ஸ்பானிஷில் முழுத்தேர்ச்சி பெற்றாரோ தெரியவில்லை).

அதுபோலவே இங்கிலாந்தில் கேம்பிறிஜ் புத்தக நிலையமொன்றில் அங்கு வந்த இத்தாலியர்கள் தன் நிறம்/உடல் அமைப்புப் பற்றி நிறைய இத்தாலியன் மொழியில் பேசுவதை அமைதியாகக் கேட்டுவிட்டு, இறுதியில் 'ஐயா, இந்த இடத்திலிருந்து மறுபக்கம் போக என்னை மன்னித்து இடங்கொடுங்கள்' என தெள்ளிய இத்தாலியன் மொழியில் சொல்ல அவர்கள் உறைந்துபோய் உடனேயே அந்த புத்தகக் கடையிலிருந்து தப்பியோடியதையும் பதிவு செய்கின்றார்.

இன்னொருமுறை ஒரு இலங்கையர் அமெரிக்காவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண் ஆங்கிலத்தில் பேசியவுடன், பக்கத்திலிருந்த அமெரிக்கர் 'அடக்கடவுளே அது  பேசுகிறது' என்று அஃறிணையில் பேசியதையும் குறிப்பிட்டுச் சொல்கின்றார். இப்படி ஒருபக்கம் இனத்துவேஷம் அமெரிக்காவில் இருக்கையில், இன்னொருபுறம் அன்றைய கால அமெரிக்கர்களுக்கு, இப்படி இலங்கை/இந்தியாவில் வரும் எவரும் செல்வந்தர்கள் எனவும், அவர்கள் ஏதோ அந்நாட்டின் மன்னர் பரம்பரையில் வந்த இளவரசர்/இளவரசி என்கின்ற நினைப்பும் இருந்தது என்கின்றார். அவர்களால் தன்னைப் போன்ற  ஒரு நடுத்தர வர்க்கத்தினர் இப்படி அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வரமுடியாது என்று உறுதியாக அந்தக்காலத்தில் நம்பினார்கள் என்றும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

இதற்கு ஒரு நல்லதொரு உதாரணமாக அடிகளார் ஒரு அருங்காட்சியகத்துக்குப் போகும்போது நிகழ்கிறது. அடிகளார் இலங்கையைச் சேர்ந்தவர் என்றவுடன் அந்த மியூசியத்துக்காரர், உங்கள் நாட்டிலிருந்து ஒரு இளவரசி எங்கள் மியூசியத்துக்கு வந்தவர் என்று சொல்லத் தொடங்குகின்றார். அடிகளார் இது யாரோ செய்த ஏமாற்றுத்தனம் என்று விளங்கியபோதும், அவர்கள் சொல்வதை நிதானமாகக் கேட்கின்றார். அவர்கள் அந்த ஈழத்து இளவரசி வந்து அந்த விபரம் செய்தித்தாளில் வந்ததைக் காட்டுகின்றார். அதில் ஒரு ஈழத்துப் பெண், கணுக்கால் நீளமான ஆங்கிலேயக் கவுணும், தலையில் இந்தியர்களின் தலைப்பாகையையும் அணிந்து, மியூசியத்துக்கு வந்தவர்களை ஒரு அரச பரம்பரையைச் சேர்ந்தவர் போல வணங்கிக் கொண்டிருக்கின்றார். அந்தப் பெண் நியூ யோர்க்கில் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கின்றார். படிப்பு முடிந்ததும் இலங்கைக்குப் போய் தனது குடிகளுக்கு வைத்தியம் பார்க்கப் போகின்றதாகச் சொல்லியிருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

எனக்கு இதை வாசிக்கும்போது எழுத்தாளர் தம்பிமுத்து இங்கிலாந்து போனபோதும் தனது நண்பர்களிடையே தான் ஒரு அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த கதைதான் நினைவுக்கு வந்தது. தம்பிமுத்துக்காவது, மாமன்  ஆனந்த குமாரசுவாமி, சுவாமி ஞானப்பிரகாசர் என்று ஒரு பரம்பரை இருந்திருக்கின்றது. அதை நீட்டித்தால் ஒருவேளை யாழ் அரச பரம்பரையின் lineage வரலாம். ஆனால் யாழ் அரசபரம்பரை என்பதே போர்த்துகேயர் வந்த 15ம் நூற்றாண்டோடு அடிவேரில்லாது போனதுதான் வரலாறு. பிறகு முழுவதும் அவர்களுக்கும், டொச்சுக்காரருக்கும், ஆங்கிலேயருக்கும்  அடிமையான வரலாறும், 'எங்கள் வாப்பாக்கொரு ஆனை இருந்தது' என்ற பழங்கதை பேசலும் மட்டுமேதான் யாழ் அரச பரம்பரைக்கு மிஞ்சியிருந்தது.

ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்ற பலருக்கு தமிழில் எழுதும்போது சிக்கல் வரும். அப்படியில்லாது தெள்ளிய நடைமொழியில் இதை அடிகளார் எழுதியிருக்கின்றார். இத்தனைக்கும் அவர் தனது 21வது வயதில் இத்தாலிக்கு கல்வி கற்பதற்காக இலங்கையை விட்டுப் புறப்பட்டவர் என்பதைக் கவனித்தாக வேண்டும்.

இதில் அடிகளார் கூறும் இந்தப் பகுதி எனக்கு மிகப் பிடித்தமானது:

'பிரயாணஞ் செய்வது ஒரு கலை. ஒரு சிறு பணத்தொகையுடன் பல இடங்களைக் காண்பது எப்படி, ஓர் இடத்திற்குச் சென்றால் எங்கு அதனைப் பார்க்க வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும், எத்தகைய விடுதியில் தங்கவேண்டும் என்பன போன்ற விவரங்களைப் பழகிய சுற்றுச் செலவுக்காரர்களிடமிருந்து அறிந்து கொள்வது நன்று' என்று எழுதியிருக்கின்றார். அன்றைய காலத்தில் பயணிப்பவர்களை 'சுற்றுச் செலவுக்காரர்' என்று சொல்லியிருக்கின்றனர் போலும்.

மேலும், 'பிற நாட்டுக்குச் செல்பவர் அனைவரும் பெருஞ் செல்வர் என்று நினைப்பது தவறாகும். ஒருவர் தம் நாட்டிலேயே பிரயாணம் செய்வதுகூட அறிவை வளர்த்து விரிவடையச் செய்யும். எனவே, கல்விக் கழகங்களும் ஏனைய கழகங்களும் செலவுக் குழுக்களை ஏற்படுத்திப் பிரயாணப் பழக்கத்தை மக்களிடையே பரப்ப வேண்டும்' என்றும் அடிகளார் சொல்கின்றார்.

இந்த நூலை நான் என் பதின்மங்களில் வாசித்திருந்தால்,  என்  'சுற்றுச் செலவுக் கலை'யை நானும் அப்போதே உற்சாகமாக ஆரம்பித்திருப்பேனோ தெரியவில்லை.

***

 

கார்காலக் குறிப்புகள் - 123

Tuesday, December 30, 2025

 

நேற்று midnight mass இற்கு, தேவாலயத்துக்கு நத்தாரின் பொருட்டு சென்றிருந்தேன். தேவாலயத்துக்குள் சனம் நிரம்பி வழிந்தது.

இவ்வளவு விசுவாசமுள்ள ஊழியர்கள் கர்த்தருக்கு இருக்கின்றார்களா என எனக்கு வியப்பு வந்தது. அதுவும் நள்ளிரவில், -1 டிகிரி செல்சியஸ் பனிக்குளிருக்குள் இத்தனை இளைஞர், யுவதிகள் தொலைபேசியை வெளியே எடுக்காது பிரார்த்தனைகளில் ஊன்றித் திளைத்தது, 'இன்ஸ்டா' காலத்து அதிசயந்தான்.

திருப்பலி, கரோல் பாடல்கள் எல்லாம் முடிய ஃபாதர் பக்கத்தில் இருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ஆரத் தழுவுங்கள் என்று சொன்னார்.

எனக்கு இடதும் வலதும் பெண்கள் இருந்ததால், மிகுந்த கூச்சத்தால் 'எந்திரன்' ரோபோ ரஜினி போல இறுக்கமாக இருந்து தலையை மட்டும் இடதும் வலதும் அசைத்தேன்.

நான் வெளியே இருக்கும் உறைபனியை விட இன்னும் இறுக்கமாக இருப்பதைப் பார்த்தோ என்னவோ, யாரோ ஒருவர் 'நத்தார் வாழ்த்துகள், மகனே' என்றார். திருப்பி அவரை வாழ்த்துவதற்கு முன்னர் குரல் எங்கேயிருந்து வருகின்றது என்று சுற்று முற்றும் பார்த்தேன்.

அப்படி ஒருவர் பக்கத்தில் இருக்கும் அசுமாத்தம் தெரியவில்லை. அண்ணாந்து கூடப் பார்த்தேன். என் தேடலைப் பார்த்து அதே குரல், 'மகனே இங்கேதான் இருக்கின்றேன்' என்றது.

அப்போதுதான் தெரிந்தது, அது சிலுவையில் அறையப்பட்ட தேவகுமாரனிடமிருந்து வந்தது என்பது .

எனக்கு இப்போது எப்படி இயேசுவை திருப்பி வாழ்த்துவது என்று குழப்பம் வந்தது. எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமென, 'கடவுளின் பெயரால் உங்களை நானும்  வாழ்த்துகின்றேன் தேவகுமாரனே' என்றேன்.
Uploaded Image
இந்தப் பொழுதில் அவர் இரட்சகராக மாறவில்லைத்தானே. இப்போதுதானே பிறந்திருக்கின்றார். அவரை ஒரு குழந்தை போல ஆராதிக்கலாந்தானே. எனவே நான் திரும்பவும் 'கடவுளிள் பெயரால் குழந்தை இயேசுவே உங்களை ஆசிர்வதிக்கின்றேன், இந்த முறையாவது நீங்கள் சிலுவையில் அறையப்பட்டாது நல்லுலகில் பிறந்து வளரவேண்டும், முக்கியமாக பெத்லஹம் பக்கம் மட்டும் போகவேண்டாம், அந்தப் பகுதியில் இப்போதும் போர் நடந்து கொண்டிருக்கின்றது' என்றேன்.

'மகனே, என் பிறப்பு குறித்து நீ கவலைப்பட வேண்டாம். நான்  பிறந்து 2000 ஆண்டுகள் ஆனபின்னும் ஏன் நான் ஒவ்வொரு காலத்திலும் தேவையாக இருக்கின்றேன் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றாயா? ஏன் என்றால் இந்த அற்ப மானிடர்கள் இன்னும் திருந்தவே இல்லையே. அதனால்தான் திருப்பத் திருப்பப் பிறந்து கொண்டிருக்கின்றேன்.'

'அப்படியெனில், அந்த மூன்றாம் நாளில் திருப்பி உயிர்த்தெழுந்தது?' என்று இழுத்தேன்.

'அது, ஈஸ்டர் பெருநாளில் கேட்க வேண்டியது. எல்லாக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான்  என்ன உங்களின் 'கடல்' எழுதிய ஆசிரியரா?' என்றார் இயேசு.

தேவகுமாரனே இலக்கியம் பேசத் தொடங்கினால், இது பிறகு ஆபத்தாகப் போய் முடிந்துவிடும் என்று எண்ணி கதையை வேறு பக்கம் திருப்ப முடிவு செய்தேன்.

'இயேசுவே, இந்த நன்னாளில் உங்களிடம் இந்த வருடத்தில் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு, உங்களைப் போன்று ஒரு மாசற்ற குழந்தையின் மனதோடு வரும் புதுவருடத்தை அனுபவிக்க விரும்புகின்றேன். என் பாவங்களிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள்' என்றேன்.

அவரோ மிகுந்த ஆதூரத்துடன் அறையப்பட்ட சிறையில் இருந்து இறங்கி வந்து என் தலையைக் கோதி, 'மகனே உன் பாவங்கள் அனைத்திலிருந்தும் நீ விடுதலை அடைந்தாய்' என்று ஆசிர்வதித்தார்.

அப்படி ஆசிர்வதித்து விட்டு, 'இனி அடுத்த வருடத்திலிருந்து நீ பாவமன்னிப்புக் கேட்க என் தேவாலயம் வரத் தேவையில்லை' என்றார்.

'கர்த்தரே, நீங்களுமா என்னைக் கைவிட்டு விட்டீர்கள், இது நியாயமா' என்று நான் அலறினேன்.

'இல்லை மகனே, உன்னைப் போன்ற ஒரு விசுவாசியை நான் எப்படிக் கைவிடுவேன். பிறகு எப்படி எனக்குப் பொழுது போகும்?'

'அப்படியாயின், ஏன் பாவமன்னிப்புக் கேட்க இனி வரக்கூடாது என்கின்றீர்கள்?'

'அதுவா, என் பாவமன்னிப்புப் பட்டியலில் இருக்கும் எல்லாப் பாவங்களையும் நீ செய்துவிட்டாய். இனி நீ எந்தப் பாவத்தைச் செய்தாலும் அது பழைய பாவமாகத்தான் இருக்கும். அதற்கு மன்னிப்புத் தேவையே இருக்காது. அதுதான் பாவமன்னிப்பு உனக்கு இனி தேவை இல்லை என்கின்றேன்' என்றார் இயேசு.

எனக்கு இப்போது 'அப்பாடா', என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அப்படியே எனக்குள் தோன்றிய சந்தேகத்தையும் கேட்டேன். 'தேவகுமாரனே, நான் அவ்வப்போது தியானம் என்று புத்தரிடமும், என்னை அறியாமலே என் வாய் 'பால் காவடி சுமந்து ஓடினேன்' என்று முருகனைப் பாடுவதும் உங்களைத் தொந்தரவுபடுத்தாதா என்று கேட்டேன்.

'இல்லை மகனே, நீ எது செய்தாலும் ஒரு விடயத்தில் நீ மாறமாட்டாய் என்பதில் எங்கள் எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்'

'எதைச் சொல்கின்றீர்கள்?'

'எங்கு போனாலும் எதைப் பாடினாலும் நீ ஒருபோதும் திருந்தப் போவதில்லை, உனக்கு மீட்சி கிடைக்கப் போவதில்லை'

கர்த்தர் இப்படிச் சொன்னபோது என் மனம் கலங்கினாலும், அதுதானே உண்மையென்று பிறகு தெளிந்துவிட்டிருந்தேன்.

இதற்குள் இயேசுவும் திரும்பவும் அவர் அறையப்பட்ட சிலுவையில் ஏறுவதற்காக நடக்கப் போனார்.

அப்போதுதான், அப்பமும் வைனும் ஃபாதரிடமிருந்து வாங்குவதற்காக நமது 'காலம்' செல்வத்தார் எழும்பிப் போவதைக் கண்டேன்.

'கர்த்தரே, எனக்கு பாவமன்னிப்பு அளித்ததுமாதிரி நமது 'காலம்' செல்வத்தாருக்கு ஏன் நீங்கள் விடுதலை அளிக்கக் கூடாது. ஒரு தீவிர கத்தோலிக்கரான அவரை நீங்கள் இந்த வயதிலும் இப்படி வருத்தி எடுக்க வேண்டுமா?'

'அவர் செய்த பாவங்களில் பெரும் பாவம் எதுவென்று தெரியுமா?' என்று கேட்டார் இயேசு.

'தெரியாதே?'

'அந்தப் பெரும் பாவம் அவர் இப்போதும் 'காலம்' என்கின்ற சஞ்சிகையை வெளியிட்டு வாசிப்பவர்களைச் சித்திரவதை செய்து கொண்டிருப்பதுதான்'

'இயேசுவே, நானும் அதில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன் என்பதால் அந்தக் கொடுஞ்செயலின் பாரத்தை உணரமுடிகிறது. ஆனால் செல்வத்தார் பாவம். எனக்கு இந்த வருடத்தோடு பாவமன்னிப்பு இனி வேண்டாம் என்று விலக்கு அளித்ததுபோல, செல்வத்தார் மீதும் பரிதாப்பட்டு அவருக்கும் பாவமன்னிப்பிலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும்' என்றேன்.

'என்னாலும் ஒருகட்டத்தில் முடியாமல், மிஸ்டர் செல்வம், உங்களுக்கு இனி பாவமன்னிப்புத் தேவையில்லை. நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு இதழ் என வெளியிடும் காலம் இதழையும் மன்னித்துவிட்டேன். இனி தேவாலயத்துக்கு வரத் தேவையில்லை என்றேன். ஆனால்...'

'என்ன கர்த்தரே,  எல்லாம் செய்ய முடியும் நீங்களே ஆனால் என்று இழுக்கின்றீர்கள்'

'இல்லை. இவர் 'காலம்' இதழை ஒவ்வொரு முறையும் வெளியிட அதில் எழுதுகின்றவர்கள் செய்யும் புதிய பாவங்களும் இவரின் கணக்கில் எழுதப்படுகின்றது. அதை என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஒவ்வொரு வருடமும் அவர் பாவமன்னிப்பு கேட்கத்தான் வேண்டும்' என்று சொல்லிவிட்டு இயேசு விடுவிடுவென்று சிலுவையில் போய் தன்னை அறைந்து கொண்டுவிட்டார்.

*

யுவன் சந்திரசேகரின் 'கானல் நதி'யும், 'எண்கோண மனித'னும்

Saturday, December 27, 2025

 


யுவன் ஒரு நேர்காணலில் 'நான் லக்‌ஷ்மண்ஜூலாவிலிருந்து கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது லேசாகத் தூறல் போட்டது. அந்தத் தூறலில் கங்கையின் மொத்தப் பரப்பும் சிலிர்த்துக்கொண்டதுபோல ஒரு காட்சி கிடைத்தது. அதில் கரைந்துவிடத் தோன்றியது. மறுபடியும் குடும்பத்துக்குள் போக வேண்டாம், இப்படியே எங்கேயாவது போய்விடலாம் என்றிருந்தது. ஆனால், ஒரு நொடிதான். பிறகு, பிரக்ஞை நம்மைத் திருப்பி இழுத்துக்கொண்டுவந்துவிடும். பிரக்ஞை யின் இந்தக் கட்டளைக்குக் காது கொடுக்காதவன்தான் வேறு ஒன்றாக மாறிவிடுகிறான். இசை என்பது ஒருவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணம்!' என்று கூறியிருப்பார்.

இதை இன்னும் விரித்துப் பார்த்தால் யுவனின் நாவல்களான 'கானல் நதி'யும், 'எண்கோண மனிதனும்' வந்து சேர்வார்கள். இரண்டுமே பதினைந்து வருடங்கள் வித்தியாசத்தில் எழுதப்பட்டாலும், இவற்றிற்கிடையில் இணைப்புப் புள்ளிகளைத் துழாவிப் பார்ப்பது சுவாரசியமானது. இரண்டுமே இளவயதில் உச்சத்தில் இருந்த இரண்டு கலைஞர்களையும், அவர்கள் பெருஞ்கலைஞர்களாக மாறப்போகின்றார்கள் என்கின்றபோது வீழ்ச்சியடைந்தவர்களாக மாறிவிடுவதையும் பார்க்கின்றோம்.

Uploaded Image

கானல்நதியில் இந்துஸ்தானி இசையில் உச்சத்த்தில் இருக்கும் தனஞ்சய முகர்ஜியும், 'எண்கோண மனிதனில் நாடகம்/சினிமாவில் பிரபல்யமாக இருக்கும் சோமனும் தமக்கான சரிவுகளை தாங்களே விரும்பி ஏற்பவர்களாக இருப்பவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதுதான் வியப்பானது. தனஞ்சய்யிற்கு ஒரு காதல் முறிவும், கச்சேரிகளில் பழக்கமாகும் மதுவும் அவரின் அழிவுக்கு ஒரு புறக்காரணமாக இருப்பது போல, சோமனுக்கு அவரது பாலினம் சார்ந்து வரும் குழப்பம் ஒரு காரணமாக இருக்கின்றது.

எப்படி ஒரு உச்சத்துக்கு கலைஞர்களாகப் போகின்றார்களோ, அப்படியே அவர்கள் அடையும் வீழ்ச்சியையும் தம்மளவில் ஏற்றுக்கொள்கின்றார்கள். ஏற்றுக்கொள்வது மட்டுமில்லை தம்மை பொதுவெளிகளில் இருந்து முற்றாக இல்லாமலும் செய்கின்றார்கள்.


யுவன் மேற்குறிப்பிட்ட நேர்காணலில் குறிப்பிட்ட -கங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது குடும்பத்தில் இருந்து காணாமல் போகும் கனவு பெருகியதைப் போல- எண்கோண மனிதனாகிய சோமன் சட்டென்று ரெயினில் ஏறி என்றென்றைக்குமாக காணாமல் போகின்றார். இந்தக் காணாமல் போதல் கானல் நதியில் தனஞ்சய் முகர்ஜிக்கு தெருக்களில் எதுவுமற்று அலைகின்ற நாடோடித்தனத்துக்கு அழைத்துச் செல்கின்றது.

சோமன் மீது அவ்வளவு விருப்புடன் அவரது (இரகசிய ) மனைவியான அலுமேலும், இன்னொருபுறத்தில் அவர் மீது பித்துப்பிடித்தலையும் காதலியான விஜயாவும் (ராதிகா கட்கர்) இருக்கின்றபோதும் சோமன் அவர்களிடமிருந்து தனது காணாமல் போதலைச் செய்கின்றார். அவரது பாலினம் சார்ந்த மாற்றம் மட்டுந்தான் இந்த 'தொலைந்து போதலுக்கு' காரணமாக இருக்காது. ஏனெனில் அவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்த அலுமேலுவுக்கு சோமனின் இந்த பாலின மாற்றம் ஒருவகையில் புரிகிறதை வாசகர்களாகிய நாம் புரிந்து கொள்கின்றோம்.

யுவனின் இந்த இரண்டு புனைவுகளையும் வாசிக்கும்போது வீழ்ச்சியடைந்தவர்க்கும் இந்த உலகில் இடமிருக்கின்றது என்பதை உணர்கின்றோம். அது அவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்ட பாதாளத்தில் புரண்டெழும் ஓர் இருண்ட வாழ்க்கையாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

Uploaded Image
யுவனின் நாவல்களில் இருக்கும் ஒரு சிக்கல் என்பது சட்டென்று நுழைந்துவிட முடியாத ஒரு தன்மையாகும். மொழியின் சிக்கலான மொழியில் நடைபெறும் விடயமல்ல இது. யுவனின் கதாபாத்திரங்கள் நிறையப் பேசிக் கொண்டிருப்பார்கள். இதிலென்ன இருக்கின்றது என்று சாதாரணமாக அந்த உரையாடல்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு நுண்ணிய விடயத்தை அவர்கள் பேசிவிடுவார்கள். அவ்வாறான நுண்ணிய விடயங்கள் சேர்ந்துதான் அவரின் புனைவு என்கின்ற மாயவுலகத்தை கட்டியமைக்கின்றது. ஆகவே ஒரு வாசகர் இது சாதாரண உரையாடல் என்று எழுந்தமானமாக வாசித்துக் கொண்டு போனால்  கடைசியில் யுவன் என்ன இந்தப் புனைவுகளில் சொல்கின்றார் எனச் சலிப்பு வந்துவிடும்.

ஆனால் என்னை இந்த வகை எழுத்தே உள்ளிழுத்துக் கொண்டது. ஏனெனில் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி யதார்த்தவகை எழுத்து எனக்கு அலுப்புத் தருபவை. பொங்கும் பூம்பாளம் போல நடையில் வாசகர்க்கு எந்தவகை இடத்தையும் தராது எல்லாந் தெரிந்தது மாதிரி பேசும் புனைவுகள் என்னைப் பொருத்துவரை சலிப்பானவை. அண்மைக்காலத்தில் கூட இப்படிப் பலவற்றை வாசித்திருக்கின்றேன்.

எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றேன். ஏனெனில் அந்த படைப்பாளிகள் மனம் வருந்தவோ, அவர்களின் வாசகர்களோ சண்டைக்கு வருவதற்கு இடமுண்டு என்பதால், எண்கோண மனிதனில் வரும் சம்பந்த மூர்த்தி மாமா போல இந்த இடத்தில் இருக்க விரும்புகின்றேன். சம்பந்த மூர்த்தி, கிருஷ்ணனிடம் உயர்வர்க்கத்தினரின் இரகசியக்  கதைகளைச் சொல்லும்போது ஒருபோதும் அவர்கள் யாரென்றோ, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ சொல்வதில்லை. சம்பந்த மூர்த்தியின் கட்சியில் நானும் இந்த விடயத்தில் சேர்ந்துவிடுகின்றேன்.

எண்கோண மனிதனில் சோமன் அவனின் இருபத்தைந்து வயதில் உச்சத்தில் இருந்து தொலைந்து போகின்றான். அவனை சம்பந்த மூர்த்தி அடுத்த இருபது வருடங்களின் பின் தேடத்தொடங்குகின்றார். அப்படி அவர் சோமனோடு சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுவதை காஸெட்டுக்களில் பதிந்து வைத்திருக்கின்றார். அதை சம்பந்த மூர்த்தி இறந்தபின், கோவிட் காலத்தில் கேட்டு கேட்டு நமக்கு ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகின்றார் கதைசொல்லியான கிருஷ்ணன்.

இதைப் போன்றுதான் கானல் நதியில், தனஞ்சய் முகர்ஜியின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் ஒரு பத்திரிகையாளராக இருக்கும் கேசவ் சிங் சொல்வதை நாம் பார்க்கின்றோம்.

இவர்கள் இருவரும் தாங்களாகவே விரும்பி தொலைந்து போனவர்கள். ஒருவர் இந்துஸ்தானி இசையிலும், இன்னொருவர் சினிமாவிலும் உச்சத்தைத் தொடப்போகின்றார்கள் என்று நினைக்கும்போது புகழ் வெளிச்சத்தில் இருந்து விலத்திப் போகின்றவர்கள்.

எனக்கு கானல் நதியை வாசிக்கும்போது மைக்கல் ஒண்டாச்சி இப்படி உச்சத்தில் இருந்து வீழ்ச்சிக்குப் போன ஜாஸ் கலைஞனைப் பற்றி எழுதிய நாவலான 'Coming Through Slaughter' ஞாபகத்துக்கு வந்தது.  ஒண்டாச்சியின் நாவல் நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது. அதில் ஜாஸ் இசையில் உச்சத்தில் இருக்கும்  Buddy Bolden  தனது முப்பத்தொராவது வயதில்  மனப் பிறழ்வுக்குள்ளாகின்றார். அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கோ (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) , திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கோ தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படுவதில்லை. அந்நாவல் போன்றே கானல் நதியில் தனது இந்துஸ்தானி இசை ஞானத்தை ஏன் அவ்வளவு எளிதில் கைவிட்டு ஒரு நாடோடியாக தனஞ்சய் முகர்ஜி அலைகின்றார் என்பதற்கு தெளிவான காரணம் கிடைப்பதில்லை. அதுபோலவே ஏன் எண்கோண மனிதனில் ஒரு சினிமாவின் சூட்டிங் முடிந்தவுடன் ரெயின் ஏறி என்றென்றைக்குமாக சோமன் என்கின்ற நடிகன் ஏன் தொலைந்து போகின்றார் என்பதற்கும் நமக்கு காரணங்கள் துல்லியமாகத் தெரிவதில்லை.

நமக்குத் தெரிவதெல்லாம், இந்த காணாமல் போன கலைஞர்களினூடு பழகிய மற்றவர்களினூடு கிடைக்கும் மனச்சித்திரங்கள் மட்டுமே. ஆகவே இவை ஒருபோதும் ஒரு முழுமையான சித்திரத்தைத் தரப்போவதில்லை. நாம் துண்டுதுண்டாக எமக்கு விரும்பியமாதிரி இந்த கலைஞர்களின் வாழ்க்கையையின் உயர்வையும் வீழ்ச்சியையும் ஓவியமாக்கிப் பார்க்கலாமே தவிர இது அந்தப் பாத்திரங்கள் சொல்லவிரும்பும் கதைகள் அல்ல என்பதும் புரிகிறது. அந்தப் புதிர்த்தன்மையை இந்த நாவல்களை வாசிக்க இன்னும் சுவாரசியமாக்கின்றன.

யுவனின் Alter Ego என ஓர் எளிமைக்காக நான் நினைக்கும் கிருஷ்ணன் என்கின்ற பாத்திரம் முதன்முதலாக சிறுகதைகளிலிருந்து விடுபட்டு எண்கோண மனிதன் என்கின்ற நாவலிற்குள்ளும் நுழைகின்றது. அது யுவனின் கதையை ஒட்டி தனது கதையைச் சொல்வது போல (பிறந்த வருடம், தகப்பனை இழந்த காலம்) இருந்தாலும் அது யுவனின் பாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வேண்டுமெனில் கங்கைக் கரையைப் பார்த்து எல்லாவற்றையும் விட்டு சுதந்திரமாக ஓட விரும்பிய யுவன் இசைப்பக்கமாகப் போயிருந்தால்  ஒரு தனஞ்சய் முகர்ஜியாகவோ, நடிப்புத் திசையில் போயிருந்தால் ஒரு சோமன் போலவே ஆகியிருக்கலாமென சுவாரசியத்துக்காய் நாம் யுவனைக் கற்பனை செய்து பார்க்கலாம்.

யுவனின் படைப்புக்களை யாரின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கின்றார்களோ தெரியாது. எங்கோ ஓரிடத்தில்  கி.ராஜநாராயணினதும், நாஞ்சில் நாடனினதும் உரையாடல்களினால் கதைசொல்லும் வகைக்காக யுவனை அவர்களின் நீட்சியாக வைக்கலாமென வாசித்தது நினைவிலுண்டு. ஆனால் என் வாசிப்புக்களின் அடிப்படையில் அவரை நான் நகுலனின் நீட்சியில் வைத்துப் பார்க்கவே விரும்புவேன். நகுலனுக்கு என்று ஒரு காலம் இருந்தது என்றால், யுவன் சமகாலத்துக்குரிய நகுலனின் தொடர்ச்சியெனச் சொல்வேன்.

யுவனின் புனைவுகளில் கதாபாத்திரங்கள் நிறையப் பேசிக் கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அது யுவன் தனக்குள் பேசிக்கொள்ள விரும்புகின்ற விடயங்கள் போலத்தான் இருக்கின்றது. நகுலனுக்கு ஒரு நவீனன் என்றால் யுவனுக்கு ஒரு கிருஷணன். 'இசை என்பது ஒருவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணம்' என்று யுவன் சொல்வதைப் போல, யுவனுக்கு எழுத்து என்பது அவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணங்களாகவே இருக்கின்றது என நினைக்கின்றேன்.

கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது என்று உறுதியாக நம்புவதைப் போல, அதே கலை அவ்வளவு நேர்த்தியாக/முழுமையாக எல்லாம் இருக்கத் தேவையில்லை என்பதையும் நம்புகின்றவன் நான். எனவே இந்நாவல்களில் தென்படும் சில பலவீனமான பக்கங்களை, அவை வாசிப்பில் அவ்வளவு உறுத்தாதபோது ஒருபக்கமாய் ஒதுக்கி வைத்துவிடலாம்.

நானும் அகத்தேயும் புறத்தேயும் எனக்கான பயணங்களில் தொலைந்துபோய் அலைக்கழிபவன் என்பதால்,  என்னை யுவனின் இந்த இரண்டு நாவல்களும் வசீகரிக்கின்றன. மேலும் வீழ்ச்சியுற்றவர்களைப் பற்றி ஆதூரத்துடன் அவர்களின் கதைகளைச் சொல்ல யுவனைப் போன்ற படைப்பாளிகள் இருக்கின்றார்கள் என்பது நமக்கு எவ்வளவு இதம் தருகின்றது.

***